பக்கம்:இலக்கண வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


பொருட்கிளவி நீளல், மீ என்பதன்முன் மெலி மிகல், அதுமுன் வரும் அன்று 'ஆன்று ஆதல், பனை அரை ஆகியவை அம்பெறுதல், வேட்கை அவா 'வேணவா' ஆதல் என்பனவும் தொல்காப்பியர்க்குப் பண்டையோர் பாலித்தவையே.

அகம் முன் வரும் கை புணர்வில் 'அங்கை' ஆதல், இலம் முன்வரும் படு 'இலம்பாடு' ஆதல், நாட்பெயர் னகர வீற்றுப் பெயர் ஆகியவற்றின் புணர்ச்சி, தான் யான் என்பவை அல்வழியில் திரியாமை, முன் இல் என்பன 'முன்றில்' ஆதல், ஏழ் என்பதன்முன் அளவு நிறை எண் ஆகியவை வரின் முதல் குறுகுதல் இன்னவையும் தொல்காப்பியர்க்குத் தொன்மையவே,

இடைத்தொடர் ஆய்தத் தொடர் புணர்வில் இயல்பாதல், மென்றொடர் அக்குப்பெறுதல், பெண்டு அன்பெறுதல், முவ்வுழக்கு மூவுழக்கு ஆதல், நூறு என்பதன் முன் அளவும் நிறையும் வருங்கால் நூற்று என ஒற்றுமிகுதல் என்பன தொல்காப்பியர்க்கு முதுவர் வழங்கியவையே.

இவை தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பாக்களில் என்ப, மொழிப முதலிய குறிப்புகளுடன் கூறப்பட்டுள்ளவற்றின் பொருளடைவாகும். இவ்வாறே, சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்பவற்றையும் தொகையிட்டு விரித்துக்காணின் முந்தையோர் கொடைநலம் ஓராற்றான் விளங்கும். அதுவும் ஓராற்றான் அன்றி முற்ற முடிந்த தாகாதாம்.

‘என்ப’ ‘மொழிப’ முதலாகத் தொல்காப்பியர் சுட்டாது ஒழிந்தன வெல்லாம், தொல்காப்பியனாரே கண்டுரைத்தன எனலும் முறையன்று. அவர் கண்டனவும், அவர் காலத்து நூலோர் கண்டனவும், வழக்கறி மேலோர் கண்டனவும் பலப்பல இருத்தல் கூடும். அஃதியற்கை. அவர் முந்தையர் நூற்கொள்கைகளை நூற்பா அமைதிக்கு

இ.வ—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/62&oldid=1471357" இலிருந்து மீள்விக்கப்பட்டது