பக்கம்:இலக்கியக் கலை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 13: கவிதைக் கலை கவிதைக் கலை என்றவுடனேயே, கவிதையும் ஒரு கலையா என்ற ஐயம் பலருக்கு உண்டாகலம். கட்டிடக்கலை, சிற்பக்கலை, சித்திரக்கலை, இசைக்கலை என்று கேள்விப்படுகிறோம். அவற்றைப்போலக் கவிதையும் ஒரு கலை; அவற்றிலெல்லாம் இது சிறந்த கலை என்பதை நாம் நினைப்பதில்லை. இங்ங்னம் இருப்பதற்குக் காரணம் கலையைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படாமல் இருப்பதுதான். கவிதையின் பழமை கவிதை, உலகில் இன்று நேற்றுத் தோன்றியதன்று. மிகப் பழங்காலந்தொட்டு அது பயின்றுவருகிறது. உரைநடை தோன்று வதற்கு முன்னமேயே கவிதை தோன்றிற்று என்று கூறுகிறவர்களும் உண்டு. சரித்திரம் தோன்றுவதற்கு முன்னர்த்தொட்டு எல்லா மொழிகளிலும் கவிதைகள் தோன்றியுள்ளன. இன்று உலகிடை எத்தனையோ மொழிகள் தமக்கென வரிவடிவம் இல்லாமல் இருக்கின்றன. எனினும் அவற்றிற்கூடக் கவிதை உண்டு என்பதை அறிவோம். கவிதைக் கலையின் பிறப்பு. கவிதை என்றால் என்ன? அது தோன்றும் விதம் யாது? என்பன போன்ற வினாக்களுக்கு அவரவர் கருத்துப்போல் விடையளித்து வருகின்றனர். மேலைநாட்டில் கவிதைக் கலையைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது. ஆனாலும் முடிவான கருத்தாக ஒன்றும் இல்லை. மனிதன் பெற்ற பெரும் பேறுகளுள் மனம் என்பதும் ஒன்று. அதன் விரிவாய் இருப்பது அகமணம். அவ் அகமனத்தில் தோன்றிக் காலம் இடம் பொருள் என்னும் கட்டுப்பாடுகளை ஒருவாறு வென்று நிலைபெற்றிருக்கும் கவிதையைப் பற்றிய முடிவான கருத்தை யார் அறிவிக்க முடியும்? மனித மனத்தின் ஆழமும், பரப்பும், அறிய முடியா இயல்பும் கவிதைக் கலையிலும் மிளிர்வதைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/168&oldid=750978" இலிருந்து மீள்விக்கப்பட்டது