பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 புலவர் கா. கோவிந்தன்



முனிவரும் மக்கள்பால் மாறா அன்பு காட்டுவர். அம் மக்களைப் பெறுதற்கு உலகோர் மேற்கொள்ளும் அறநெறிகள், அம்மம்ம ! நம்மால் எண்ணிக் காணமாட்டா அத்துணைப் பலவாம்.

“மக்கட்பேறு மாநிதிப் பேற்றினும் மாண் புடைத்து! மக்களைப் பெறாதார் மாண்புடையராகர், ஆகவே மக்களைப் பெறாமுன் மாண்டு மறைந்து போகாதீர்; போர்க்களம் புகும் வீரருள் மக்கட் பேறிலாதார் யாரேனும் இருப்பின், படைத் தலைவர்காள்! அவர்களைப் போர்க்களம் போக்கன் மின்,” எனப் பறையறைந்து மக்கட் பேற்றினைப் போற்றினர் அக்கால அரசர்கள். பகைத்துப் படைகொண்டு புகும் பகையரசனும், “பகைவர்காள்! தும்மிடையே மகப் பெறாதார் உளரேல், எம் படைக்கலம் வந்து பாய்வதன் முன்னர்க் களம் விட்டு அகலுங்கள்.

     பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும்
     எம்அம்பு கடிவிடுதும், நும்அரண் சேர்மின்,”

எனக் கூறி, அவரை அழிக்காது விடுத்தனன் என்றால், அக்கால அரசர்கள் மக்கள் பேற்றினை எத்துணை இன்றியமையாததாகக் கருதினர் என நோக்குங்கள்.

மக்கட் பேற்றின் மாண்பினை, அக்கால அரசர்கள் அறிந்திருந்ததைப் போன்றே, அறிவுடை நம்பியும் அறிந்திருந்தான். அதைத் தான் அறிந்ததோடு நின்றானல்லன். தன் நாட்டு மக்கள் எல்லாரும் அதை