பக்கம்:இலக்கியச் சாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வ.சுப. மாணிக்கனார்



நம் இலக்கியப்பரம்பரை

‘நானார் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்’ என்று மணிவாசகர் தற்சிந்தனை செய்தது போல, தமிழ் எழுத்தாள்வார்களான நாம் யார்? நம் பரம்பரை எத்தகையது? நம்மொழி எத்திறத்தது? நம் வாசகர்கள் எவ்வண்ணர்? நம் எழுத்து நோக்கங்கள் யாவை? அவற்றின் எதிர்கால விளைவுகள் யாவை? இவற்றையெல்லாம் தற்சிந்தனை செய்யவேண்டிய மாநாடு இது.

உலக மொழிகளுள் என்று பிறந்தவள் என்று அறிய கில்லாத தொன்மையானதும், இந்திய மொழிகளுள் உலகமொழி என்ற செல்வாக்கினதும் நம் தமிழ். பாரதியார் பாடியபடி, ஒரு காலத்தில் ஆரியத்துக்கு நிகராக வளர்ந்திருந்ததும், இப்போது ஆங்கிலத்திற்கு நிகராக நம்மால் வளர்க்க வேண்டியதும் நம் தமிழ். கலைக்களஞ்சியம் கண்ட முதல் இந்திய மொழியும் தமிழேயாம்.

நம் எழுத்து முன்னோர்கள் யார் என்று சுழல் வேகமாக எண்ணினாலும், தொல்காப்பியர் சங்கச் சான்றோர் திருவள்ளுவர் இளங்கோ திருத்தக்கதேவர் சேக்கிழார் கம்பர் வீரமாமுனிவர் உமறுப்புலவர் இளம்பூரணர் சிவஞானமுனிவர் பவணந்தியார் காரைக்காலம்மையார் ஆண்டாள் வள்ளலார் வேதநாயகர் உ.வே.சா. மறைமலையடிகள் திரு.வி.க. பண்டாரத்தார் மு.வ. அவ்வை துரைசாமி பாவாணர் பாரதியார் பாரதிதாசன் கண்ணதாசன் வ.வே.சு. புதுமைப்பித்தன் கல்கி மெளனி சோமலெ என ஆயிரக்கணக்கான முன்னோடிகள் தமிழ்வானத்து ஒளிறுகின்றனர். இப்பெருமைப் பரம்பரையில் நாம் தமிழ்ப் பிறப்பு எடுத்திருப்பதற்குப் பெருமிதம் எய்துகின்றோம். அதுவும் எழுத்தாளராகப் பிறந்து தமிழ்ப்பணி செய்வதற்கு மகிழ்கின்றோம். நம் முன்னோரை நாம் மதிப்பது போல, நம்பின்னோர் நம்மை நல்ல முன்னோர்களாக ஏற்றுக் கொள்ளவேண்டுமே என்ற அவலக் கவலையும் நமக்கு இல்லாமல் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/14&oldid=509733" இலிருந்து மீள்விக்கப்பட்டது