பக்கம்:இலக்கியச் சாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் துய்ப்பதில் புதுநெறி பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம் மூதறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் வகைப்படுத்தி, ஓரினப் பொருளை ஒரு தலைப்பின் கீழ் நூலாக்கும் திட்டத்தில் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் வரிசை ஆய்வாளருக்கு மிகுந்த பயனை அளிக்கும். இவ்வகை நூல்கள் வருங்கால ஆய்வுக்கு அடிப்படையாய் அமைவன. ஆய்வுக்களங்கள் பல அமைந்த இக்கட்டுரைகள் அனைத்தும் ஒரு நூலாக அமைவதால் பயன் மிகுதியாகிறது: குறிப்பிட்ட துறையில் பார்வை நூலாகவும் அமைகிறது. இவ்வகை நூல்கள் மேற்கோளாட்சிக்கு மிகுதியும் பயன்படுவன. செம்பதிப்புக் கேற்ப, கட்டுரைகள் ஒருசேர வரிசைப் படுத்தப்பட்டுள்ளன: வகைமைப்படுத்தப் பட்டுள்ளன. பேரறிஞர் ஒருவர் ஒரு துறையைப் பற்றி நீண்ட நெடிய காலம் சிந்தித்த சிந்தனைகள் எல்லாம் அவராலேயே ஒழுங்குபடுத்தப்பெற்று ஒரு நூலாக அமைக்கப் பெறுவது பல்வகைப் பயனைத் தரும் அரிய முயற்சி; பெரிய முயற்சியாகும். ஆசிரியர் இக்கட்டுரைகளை மறுபரிசீலனை செய்து சீர்திருத்தி, செம்மைப்படுத்தி, முறைப்படுத்தி, வகைப்படுத்தி நூலாக்கியுள்ளது வளர்தமிழ் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும். இத்தொகுப்பு நிகழ்கால ஆய்வு, வளத்திற்குக் கண்ணாடி, பேராசிரியரின் ஆய்வு வன்மைக்கு, அருந்தமிழ் ஆற்றலுக்கு இந்நூல் வரிசை பெருமை சேர்க்கும். வ.சுப. மாணிக்கனார் தாம் பாடல்களில் ஈடுபட்டுத் துய்த்துப்பெற்ற இன்பத்தை வையம் பயனுற அளிக்கிறார். நல்லாசிரியராதலால் பாநலங்களை நயமுடன் விளக்குகிறார். நயத்தந்தை என மாணிக்கனார் போற்றும் பண்டிதமணியின் சுவை உணர் நெறிகளில் இவரும் சுவைஞராகிறார். தாம் படைப்பாளராகவும், திறனாய்வாளராகவும் திகழ்வதால் படைப்பு நுட்பங்களை மிக நுட்பமாக விளக்குகிறார். வெறும் சொல்லழகில் ஈடுபடாமல், பாடல்களின் பொருள் ஆழத்தில் ஈடுபடுகிறார். பாட்டின் உயர்நிலையை மிகத் தெளிவாக விளக்குவது இவரது கட்டுரைகளின் தனிச்சிறப்பாகும். பாநலம் பாராட்டலும் சுவை நலம் தேர்தலும் பொது இயல்பாக இருந்தாலும், இவரது திறனாய்வுக் கோட்பாடுதான் கட்டுரைகள் தோறும் செங் கோலோச்சுகிறது. இரண்டாம் நூற்றாண்டு இலக்கியமாயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/7&oldid=751330" இலிருந்து மீள்விக்கப்பட்டது