பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

நா.வானமாமலை


மாற்றங்களின் மூலமும் மனம் மாறியவர்களின் மரபுக்கு முரண்பட்ட செயல்பாடுகளின் மூலமும் ஆசிரியர் காட்டுகிறார். இக் கதைப் பின்னல் மூலம் கதையின் கரு உருவம் பெறுகிறது. இங்கு ராஜம் கிருஷ்ணன் பொதுக்கருத்தாகச் சில பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மூலம் கதையாகப் பின்னியுள்ளார்.
பொதுக்கருத்து-மீனவர் சமூகவாழ்க்கை.
கதைப்பின்னல்-அவர்களுடைய வாழ்க்கையின் சமூக முரண்பாடுகளின் சில கூறுகள்.

கதைப் பின்னல் மூலம்தான் பொதுக்கருத்து வெளியாகும். ஒரு பொதுக்கருத்தை வெளியிடாத கதைப்பின்னல், நேரப்போக்குக் கதைகளில் காணப்படும். மர்மக் கதைகள், பாலுறவு வன்முறைக் கதைகளில் கதைப்பின்னல் மிகத் திறமையாகச் செய்யப்பட்டிருக்கும். சமூக வாழ்க்கையின் முக்கியமான கூறுகளை இவ்வகைக் கூறுகள் கதைக் கருவாகக் கொண்டிரா. மாபெரும் கலைஞர்கள் கதைக் கருவை வளர்ச்சி பெறச் செய்யவே கதைப் பின்னலைப் பயன்படுத்துவர்.

கதைப்பின்னல்

மாக்சிம் கார்க்கி கதைப்பின்னல் பற்றி எழுதுகிறார். கதைப்பின்னல் என்பது 'இணைப்புகள்' (links), விருப்பு வெறுப்புகள், மனிதஉறவுகள் ஆகிய உணர்ச்சிகளோடு தொடர்புடையது. பொதுவாக ஒரு கதாபாத்திரம் அல்லது பாத்திர வகையின் வளர்ச்சியின் கதைதான் கதைப்பின்னல். கதைப் பின்னல் நாவலில் முடிவு வரை தொய்ந்து இற்றுப்போகாமல் வளர்ச்சிப்பாதையில் செல்லவேண்டும். கதைப்பின்னல் கதை மாந்தர்களின் வளர்ச்சியை நுணுக்கமாகச் சித்தரிக்கவேண்டும். புற வாழ்க்கை இயக்கத்தின் தாக்கம் அகவாழ்க்கையை மாற்றுகிறது. இவ்விரு கூறுகளையும் சுவை குன்றாமல் சித்தரிப்பதே கதைப்பின்னல்.
ஃபேடியேவ் எழுதுகிறார்:

எழுத்தாளர் தான் கையாளும் பொருளைப்பற்றித் தெளிவாக அறிந்துகொண்டவுடன் கதைப்பின்னல் அவன் உள்ளத்தில் உருவாகிறது. பொருள் தெளிவுதான் கதை மாந்தர்களின் இயல்புகளையும் நடத்தைப் போக்குகளையும் (behaviour pattern) தெளிவாகப் படைப்பாளியின் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது.
கதைப்பின்னல் என்பது பண்டைக்கால முதல் எழுத்தாளன் பயன்படுத்தி வரும் உத்தி. அது வரலாற்று ரீதியாக வளர்ச்சிபெற்று வருகிறது. சமூக வாழ்க்கையின் இயல்புகளுக்