பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

39


கேற்பக் கதைக்கரு தேர்ந்தெடுக்கப்படும். தொடக்கத்தில் பெரும்பாலும் மன்னர்களின் பெருமை கூறும் கதைக் கருத்துக்களே கதைப்பின்னலாகப் படைக்கப்பட்டன. இவர்களுடைய வீரமும் காதலும் கதைப்பொருளாயின. கிரேக்கக் காப்பியங்கள், சங்க நூல்கள், பாபிலோனியக் காப்பியங்கள், வடமொழிக் காப்பியங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் செயல்களைப் புகழ்ந்து போற்றி எழுதப்பட்டன. பின் அவ்வாதிக்கத்தை எதிர்த்துத் தோற்றுப்போன வர்க்கங்கள் கதைப் பொருளாயின. சிலப்பதிகாரம், ஷேக்ஸ்பியரின் சில நாடகங்கள் அரசனின் தெய்வீகத்தன்மையை மறுத்தன. அவர்களுக்குத் தாழ்ந்த சமூகநிலையில் உள்ளவர்களின் எதிர்ப்புணர்ச்சியைக் கவிஞர்கள் கதையாக்கினர். இதற்குத் தகுந்த கதைப்பின்னல்கள் படைக்கப்பட்டன.
ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தில் (13.14 நூற்றாண்டுகளில் மனிதநேயக் கருத்துக்களுக்கெதிரான சமயக் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு கதைப்பின்னல்கள் படைக்கப்பட்டன. பிரான்சிலும் இங்கிலாந்திலும் தோன்றிய இக்கதைகளுக்கு Miracle plays என்று பெயர். சமய ஒழுக்கம் பெரிதும் உயர்த்தப்பட்டு மனிதரனைவரும் பாவிகள் என்ற கருத்துப் பரப்பப்பட்டது. மனிதர்கள் சமயத் திருச்சபைகளுக்கு அடங்கி நடக்கவேண்டும், அதுவே சமய ஒழுக்கம் என்று போதிக்கப்பட்டது. சமயத் திருச்சபைகள் அரசர்களின் ஆதரவில் வாழ்ந்து வந்ததால் அவர்களையே ஆதரித்து மக்களைக் கொடுமைப்படுத்தும் அரசர்களைக்கூடத் தெய்வீக உரிமை பெற்றவர்கள் என வருணித்துப் பிரச்சாரம் செய்தன. நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்ற பிரிவின்றி அரசன் செயல் எல்லாம் தெய்வத்தின் செயல் என்று கூறப்பட்டது. நாடகமாகவும் கதையாகவும் இவை பரப்பப்பட்டன. மக்களுக்குப் புரியாத லத்தீன் பாஷையில் சமய குருமார்கள் பேசி நடித்தனர். 14, 15 நூற்றாண்டுகளில் இவை செல்வாக்கிழந்து போயின. ஆங்கிலத்தில் நாட்டார் கதைகள் நாடகங்களாக வாணிபக் கழகங்களின் உறுப்பினர்களால் நடிக்கப்பட்டன. கதைகள் கதைப் பின்னலாக உருவாக்கப்பட்டன. நல்லொழுக்கம் தீய ஒழுக்கம் என்ற பண்புகள் மனித உருவாக்கப்பட்டுக் கதை மாந்தர்களாக அரங்கேறின.
சமூக நிறுவனங்கள் இதில் தலையிட முயன்று சிறிதளவு வெற்றியும் கண்டன. ஆயினும் கதை மக்களின் உள்ளங்களைக் கவரவேண்டுமானால் உண்மையான உணர்ச்சியும் ரியலிசத் தன்மையும் இருக்கவேண்டியது அவசியமாயிற்று. எனவே திருச்சபையை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடிய போக்குகள் கதை