பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

47


டம் இருந்தால் இசைவுகளை, முக்கியமானது முக்கியமற்றது என்று பிரித்தறியமுடியும். மாஸ்லோவாவின் வாழ்க்கை அவல வாழ்க்கை வாழ்கிற பெண்ணினத்தின் கதை. அவ்வினத்தை அடிமைப்படுத்தித் துன்புறுத்துகிற சமுதாயத்திற்கு அரணாகச் சமூக நீதியும் சட்டங்களும் உள்ளன. அநீதியிழைத்த ஒரு செல்வந்தன், தனது சமூகத்தின் அநீதிகளை உணர்த்து தன்னால் அவளுக்கு நேர்ந்த அவலங்களைப் போக்க முயலுகிறான். அவளோடு அவன் கொள்ளும் உறவு அவளை முதன்மையாக்குகிறது. நாவலின் இறுதியில் வரும் சைமன்சன் சமூகத்தில் துன்புறுத்தப்படுவோரின் சார்பில் போராடுகிறவன். அவள் தன்னைத் துன்பத்திலிருந்து மீட்கப் பல தியாகங்கள் செய்த நெக்லியூடாவோடு தனது வாழ்க்கையை இணைத்துக்கொண்டு இன்ப வாழ்க்கை அனுபவிக்க முடிவு செய்யாமல் சைமன்சனோடு வாழ முடிவு செய்கிறாள். தனி மனித உதவியால் சுகம் பெற்று வாழ விரும்பாமல் மனிதரனைவரின் துன்பம் போக்கப் போராடுகிற சைமன்சனோடு தனது வாழ்க்கையை இணைக்க முடிவு செய்கிறாள். இங்கே மாஸ்லோவாவின் சமூகநிலை வாழ்க்கை நிலை மாற்றங்கள், அவற்றிற்குக் காரணம், துன்பநிலையில் அவளது மனமாற்றம், சிறை பனுபவங்களில் அவள் கற்றுக்கொண்ட படிப்பினைகள், அவள் செய்கிற இறுதி முடிவு ஆகிய அக-புற நிகழ்ச்சிகளுடே ஒரு பாத்திரத்தை முதன்மையாகக் கொள்ளாமல் ஒரு பொது நிகழ்ச்சியை முதன்மையாக்கும் புதிய போக்கையும் நாம் கலைப்படைப்பில் காண்கிறோம்.


'அலிடெட் மலைக்குப் போகிறான் (Alitet goes to the hills) என்ற நாவலில் ஆர்க்டிக் பிரதேசத்தில், 1917 புரட்சியின் தாக்கத்தால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றம் பிரதானக் காட்சியாகக் கொள்ளப்படுகிறது. இந்த நாவலில் பழைய சமூகத்தின் பிரதிநிதிகள், பழைய சமூக மதிப்புகளுக்கேற்பச் செயல் புரிகிறார்கள், சிந்திக்கிறார்கள். புது யுகத்தின் பிரதிநிதிகள் புரட்சிக்களத்தில் இருந்து, புரட்சிக் காற்று வீசாத ஆர்க்டிக் வாழ்க்கையை மாற்ற வருகிறார்கள். பழமைக்கும் புதுமைக்கும் பெரும் போராட்டம் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான கதை மாந்தர்கள் இப்போராட்டத்தில் பங்கு பெறுகிறார்கள். வாழ்க்கை மாற்றம் விரைவாகத் தாவிச் செல்லுகிறது. தனித்துவப் பிடிப்பில் வாழ்ந்த சாதாரண மக்கள், கூட்டு வாழ்க்கையின் உயர்வை திகழ்ச்சிப் போக்குகள் மூலம் அறிந்துகொள்ளுகிறார்கள். புதுமை வெற்றி பெறுகிறது. இனக்குழு வாழ்க்கையிலிருந்து மக்கள் சோசலிசச் சமுதாயத்திற்கு மிகக்குறுகிய காலத்தில் ஒரு பெருந்தாவலில் குதித்தோடி