பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை


1980 சனவரித் திங்கள் இரண்டாம் வாரத்தில் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் கிறித்தவ இலக்கியச் சங்கத்தின் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்திருந்தார்கள். அடுத்து இங்கிருந்தே மத்தியப் பிரதேசம் கோர்பானில் உள்ள அவரது மூத்த மகள் டாக்டர் கலாவதி பலராமன் இல்லத்திற்கு புறப்பட்டுச் செல்வதாகப் பயணத் திட்டம் அமைந்திருந்தது.

வழக்கமாக, சென்னைப் பயணங்களின்போது, எனது இருப்பிடங்களிலேயே அவரும் தங்குவது என்பது கல்லூரிக் காலம் (1969) முதற்கொண்டு தொடர்ந்து வந்தது. எப்போதாவது வேற்றிடங்களின் தங்கவேண்டி வந்தால், நான் அங்கு சென்று அவர் புறப்படும்வரை அவருடனேயே இருந்துகொள்வேன். ஆகவே, இரண்டு மூன்று நாள்கள் அவர் புறப்படும்வரை அவருடனேயே இருந்தேன். அவர் புறப்பட்ட நாளன்று இரவில் நானும் நியூ செஞ்சுரி நூல் நிறுவனத்தின் பதிப்புத்துறைப் பொறுப்பாளர் கவிஞர் தோழர் பி.ஈ. பாலகிருஷ்ணனும் அவரை 'சென்ட்ரல்' நிலையத்தில் வண்டியேற்றிவிட்டுத் திரும்பும்வரை நாவா அவர்கள் என்னிடம் தெரிவித்த- பேசிய- விவாதித்த-அறிவுறுத்திய- ஆலோசனைகள் கூறிய- பாடம் நடத்திய ஒவ்வொன்றும் என் மனக்கண்முன் நிற்கின்றது.

கட்சிப்பணிகள், கலை இலக்கிய பெருமன்றம்,அப்போது பிஎச்டி பட்டம் பெற்றுவிட்ட நிலையில் எனது எதிர்காலப் பணிகள், மக்கள் வெளியீடு வழி வரவேண்டிய நூல்கள், அவர்தம் ஆய்வுகள், 'ஆராய்சசி' இதழ்கள் பற்றிய திட்டம் , என் மணவாழ்க்கை எனப் பல்வேறுபட்டவை அவை.

அப்போது 'ஆராய்ச்சி' இதழ்களை அச்சிடும் பொறுப்பினை நாவா அவர்கள் என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள். எனது பொறுப்பில் நான்கு இதழ்கள் (எண்கள் 19,20,21,22) வெளிவந்திருந்தன. இதனால் அடுத்து வரவேண்டிய 'ஆராய்ச்சி' இதழ்களில் வெளியிட நாவா அவர்கள் என்னிடம் மூன்று கட்டுரைகளைக் கொடுத்துச் சென்றார்கள். அவைதாம் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் (இரு பகுதிகள்) ஆகியவை.