பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்


சமூக வளர்ச்சியும் கவிதையின் தோற்றமும்
பண்டைய மனிதன் இயற்கைச் சக்திகளையும் பொருள் களையும் தன்வசப்படுத்திக்கொள்ளக் கருவிகளைப் படைத்தான். முதன் முதலில் அவன் படைத்தவை கற்கருவிகள்தாம். உலகமெங்கும் பூமிக்கடியில் புதைந்து இவை ஒரே சீராகக் கிடைக்கின்றன. அதற்குப் பின் உருவத்தில் சிறிய, நுணுக்கமான செயல்களைச் செய்வதற்குரிய கருவிகளைச் செய்யக் கற்றுக் கொண்டான். இக்கருவிகள்தான் 'நுணுக்கமாகச்' செதுக்கப்பட்ட கற்கள் (microlitis) எனத் தொல்பொருள் இய லாளரால் அழைக்கப்படுகின்றன. இக்கற்களை, வேட்டையாடவும் தற்காப்புக்கும் புராதன மனிதன் பயன்படுத்தினான். இக்காலத்தில் உலோகங்களை உருக்கி எடுக்கவும் பயன்படுத்தவும் மனிதன் அறிந்திருக்கவில்லை.
தீயைக் கட்டுப்படுத்த மனிதன் அறிந்துகொண்ட பிறகு தான் உலோகங்களைப் பயன்படுத்தத் தேர்ந்துகொண்டான். உலோகத் தாதுக்கள் அதிகமான வெப்பநிலையில் உருகும். இதனோடு ஆக்ஸிஜனை விலக்கும் பொருள்களைச் சேர்த்துச் சூடாக்கினால் உலோகம் கிடைக்கும். இவ்வாறு செம்பு, இரும்பு, எஃகு, காரீயம், வெள்ளியம் ஆகிய உலோகங்களை இயற்கையில் இருந்து உருக்கிப் பெறும் திறமையை மனிதன் வளர்த்துக்கொண்டான்.
இவ்வாறு, இயற்கையோடு போராடி வெற்றிபெற்ற மனிதன் வேறு விலங்கினங்களிலிருந்து வேறுபட்ட வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்யத் தொடங்கினான். கருவிகளைப் புனைந்து அவற்றைப் பயன்படுத்தச் சமூகமாக இணைந்து செயல்பட்டான். தனிமனிதர்களுக்கிடையே மனத்தொடர்பு கொள்வதற்காக மொழியைப் படைத்தான். பொருள் உற்பத்தி பெருகி மேலும் மேலும் இயற்கைச் சக்திகளும் இயற்கைப் பொருள்களும் மனிதன் பயன்படுத்தும் எல்லைக்குள் வந்தன.
புறச் சூழ்நிலையில் நடைபெறும் இயற்கை நிகழ்ச்சிகளைத் தனக்குப் பயன்படும் முறையில், தான் படைத்த கருவித் தொகுதிகளின் பயன்பாட்டால் மாற்றிக் கொண்டான். உணவைத் தேடிப்பெற்ற மனிதன் உணவை உற்பத்தி செய்யத்