பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

65


தொடர்ச்சியை அவன் காரணமாகக் கருதி அவற்றையே நிகழ்த்தினான்.
இந்திய இனக்குழு மக்களில் சிலர் கிழங்கைத் தரையில் புதைத்துவிட்டு ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து கிழங்கு பல்கிப் பெருகவேண்டுமென விருப்பம் தெரிவித்து ஆடினார்கள்.
தற்காலத்தில் மீனவர் கடல் கலக்கி மீன் வேட்டையாடுகிறார்கள். பெரிய மீன்கள் தங்கள் படகுகளைக் கவிழ்த்து, வலையைக் கிழித்துவிடக்கூடாது என்று எண்ணுகிறார்கள். இதற்காக, பெரிய மீன்களின் வாயைக் கட்டிவிடுவதாக எண்ணிச் சில சடங்குகளை நிகழ்த்துகிறார்கள். இவ்விருப்பத்தை வெளியிடச் சில மந்திரச்சொற்களை முணுமுணுக்கிறார்கள். இதை உலகில் எல்லாப்பகுதிகளிலும் இனக்குழு நிலையில் வாழும் மக்கள் செய்கிறார்கள். பண்டைய மக்களும் இது போன்றே செயல்களை நிகழ்த்த சடங்கு-மந்திரம் என்ற உபாயத்தைக் கையாண்டார்கள் என்று பண்டைய நூல்கள் சான்று கூறுகின்றன.
பேச்சு என்பது உற்பத்தி உத்திகளுள் ஒன்று. பண்டையப் பேச்சு மொழியை இரு பிரிவுகளாகக் காணலாம். ஒன்று தனி மனிதர்கள் தங்களுக்குள் எண்ணங்களை வெளியிடப் பயன் படுத்தும் சாதாரணப் பேச்சு. மற்றொன்று கூடித் தொழில் புரியும்போது பேசும் மந்திரப்பேச்சு. இது பாடலாக இருக்கும். தங்கள் சமூக விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் கூட்டு உழைப்பில் ஈடுபட்ட மக்கள் சடங்கு, மந்திரம், பாடல், ஆடல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள்.

பேச்சும் பாடலும்

பேச்சின் சிறப்பான வடிவம்தான் பாடல். இது கூட்டு உழைப்பிலும் கூட்டு விருப்ப வெளியீட்டிலும் தோன்றியது. இதில் சாதாரணப்பேச்சில் காணப்படாத இரண்டு இயல்புகள் உண்டு. மந்திரம் (magic), 2 இசைவு (rhythm). மந்திரம் என்பது விருப்பம், சடங்கினால் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் கூட்டாகச் சில சொற்களை உச்சரிப்பது. இசைவு என்பது சொற்களை இசைபட அமைப்பது. அவ்வாறு அமைத்தால் தான் கூட்டமாக அவற்றைப் பாடமுடியும். பண்டைய இனக் குழு மக்களிடையே சாதாரணப்பேச்சில்கூட 'இசைவு'காணப்படுகிறது. தோடர், கோதர், படகர், காளிகள், நாகர்கள் போன்ற இனக்குழு மக்களின் பேச்சில் இசைவு காணப்படுகிறது.
49/5