பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

75


இசைவில் வேறு உள்ளடக்கத்தோடு பாடல்கள் பாடப்படுகின்றன.

நடவுப் பாடல், களைப்பறி பாடல், பொலிப்பாடல் முதலியன தென்னிந்திய மொழிகளில் உள்ளன. இவை கூட்டுழைப்பில் பிறக்கின்றன. தொழிலின் தொடர்போடு தோன்றிய இசை-இசைவுகள் தொழிலின் தொடர்பு மறைந்துவிட்ட போதிலும் நிலைத்து நின்று, வேறு உள்ளடக்கம் பெறுகின்றன. இத்தகைய தொழில்பாட்டுகளின் வளர்ச்சிதான் பள்ளுப்பாட் டில் காணப்படும் உழவுத்தொழிலோடு தொடர்புடைய பாடல் கள். முற்றிலும் தொழில் தொடர்பு அறுத்துவிட்டபோதிலும் அதன் தொடர்பால் தோன்றிய சில சொற்கள் நாட்டார் பாடல்களில் எச்சங்களாக (அசை) வரும். இக்குறிப்புகள் இப் பாடல்கள் முதலில் தோன்றிய காலத்தில் அவற்றிற்குத் தொழில்களோடு தொடர்பு இருந்ததைக் காட்டும். உதாரணமாக, 'குதிபோடு’, ததிங்கனதோம்’, ‘ஏலோ ஏலம்’, 'போடு தின்னாக்கு', 'சாழலோ சாழல்', 'எம்பாவாய்' என்னும் சொற்கள் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டு, 'அம்மானை', 'கும்மியடி’, ‘தன்னா தானான தானான-தனதான தனனனன னானன’, ‘ஏலேலோ', 'பிள்ளையாரே வாரும், பிள்ளைப் பெருமாளே', 'ஆடுவாள் குறத்தி, தாலியிண்ணாத் தாலி', ‘வடக்கே கரத்தோட்டம், வாழைப்பூ பூந்தோட்டம்’, ஆ, அ , இ’, ‘மாரியம்மன் கோயிலிலே’, ‘தங்க வளை’ என்றும் பொருளில்லாமல் இசை நிரப்ப வரும்.

சங்க காலத்தில் பாணர், விறலியர், கூத்தர் என்றழைக்கப்பட்ட கலைஞர்கள் காடு மலை தாண்டி இனக்குழுத் தலைவர் களிடம் சென்று ஆடிப்பாடிப் பரிசு பெற்றார்கள். இவர்களில் சிலர் யாழை மீட்டிப் பாடினார்கள். இவர்களை யாழ்ப்பாணர் என அழைத்தனர். பறையை முழக்கிப் பாடியவர்கள் பறையர் என அழைக்கப்பட்டனர். இனக்குழுத் தலைவர்களது வீரத்தையும் கொடைத் தன்மையையும் பற்றி இவர்கள் பாடினார்கள். இவை எழுதப்பட்ட செய்யுள்களல்ல; வாய்மொழிப் பாடல்கள். இக்காலத்தே இசையும் ஆடலும் பிரிந்துவிட்டது. ஆயினும் குழுப்பாடலாகவும் குழு ஆடலாகவும்தான் அவை இருந்தன. பாணர்கள் குழுவாகப் பாடினார்கள். விறலியர் ஆடினார்கள். பாட்டுத் திறத்தைப் பாணர்கள் வளர்த்துக்கொண்டார்கள். ஆடல் திறமையை விறலியர் வளர்த்துக்கொண் டார்கள். குழுவாக ஆடலும் பாடலும் நிகழ்த்தியது இவர்கள் குழுவாகத் தொழில்களில் ஈடுபட்டதைக் குறிக்கும். இப்போது தொழிலில் இவர்கள் ஈடுபடவில்லை. தொழில் செய்வோரை மகிழ்விக்கக் குழுவாக ஆடிப்பாடினார்கள். ஆடலும் பாடலும்