பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

நா.வானமாமலை


இணைந்திருந்த காலம் ஒன்றிருந்தது. பின்னர் ஆடலும் பாடலும் பிரிந்தது. பாடுவோர், ஆடுவோர், இசைக்கருவி முழக்கு வோர் எனக் கலைஞர்கள் பிரிந்தனர்.
பின்னர் தாங்கள் போற்றும் தலைவனைப் புகழ்ந்து பாடப் புலவர்கள் செய்யுள் யாத்தனர். வீரத்தையும் வள்ளன்மையையும் பிற மேன்மையான குணங்களையும் பாடினர். பதிற்றுப்பத்து போன்ற செய்யுள்கள் தோன்றின. இதில் இசையின்றியே இசைவு மட்டும் உள்ளது. புறநானூறு, அகநானுாறு, ஐங்குறுநூறு முதலிய நூல்களிலும் இசைவு மட்டுமே உள்ளது; உணர்வுபூர்வமான முயற்சி (conscious effort) இவற்றில் காணப்படுகிறது. இசையினின்றும் இசைவு விலகிப் பண்டைக் காலச் செய்யுளாகத் தோற்றம் கொண்டது. இசையோடு பாடிய புலவர்கள், இசைவின்றியே செய்யுள் யாத்தனர்.
சில நூல்களில் இசை தொடர்ந்து காணப்பட்டது. உதாரணமாக கலித்தொகை, பரிபாடல். பண்டைய நூல்களில் சில (chant) உரையாகச் சொல்லவும், வேறு சில இசையோடு பாடவும் இயற்றப்பட்டன எனக் கொள்ளலாம்.
இசை, சொல்லிலிருந்து முற்றிலும் விலகிவிட்ட நிலையை யாழ், பறை, லைர் (கிரேக்கக்கருவி) போன்ற கருவிகளின் இசையில் காணலாம். இது கருவி இசையாகப் பிரிந்தது; செய்யுளில் சொல்லிசைவு இருந்தது. இதுவே செய்யுளாக வளர்ச்சி பெற்றது. மிகவும் பிற்காலத்தில் இசைவற்ற நாவலாகத் தோற்றம் கொண்டது.

சொல் இசைவு X சொல்லற்ற இசைவு (பாடல்) - (கருவி இசை) இசைவற்ற சொல் - நாவல்

கனவும் கவிதையும்

எடுத்துக்காட்டாக, சில செய்யுள்களைக் காண்போம். காதலர் திருப்பரங்குன்றத்தில் சந்தித்து இன்பம் நுகர்ந்தனர். இவ்வின்பத்திற்குச் சூழலாகவிருந்தது திருப்பரங்குன்றம். இன்ப விருப்பைப் பரங்குன்ன்றப் புகழ்ந்து வெளியிடுகிறான் காதலன். பரங்குன்று, தண்பரங்குன்றமாக மந்திர வயப்பட்டு மாறுகிறது. மறப்பறியாத, என்றும் மனத்தில் நிலைத்திருக்கும் சிறப்புடையதாக ஆகிறது. இது ஏன்? காதலர் சந்திப்பின் இன்பத்தோடு பரங்குன்று தொடர்புடையது. இது புறவய உலகு தரும் இன்பம். இவ்வின்ப உணர்ச்சி, அது நீடித்திருக்கவேண்