பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 12 —

முல்லையொடு மணங்கமழ்ந்து, வண்டறைந்து, வரிக்குயில் கள் பாடத் தண் தென்றல் தழுவும் தண் பொழில்களும், மாணிக்கச் சுனைகளும், அழகொழுகும் அருவிகளும் கொண்டதாகும் குறிஞ்சி நிலம். அந்நிலத்திலே உள்ளது தினைப்புனம். தினைப்புனக் காவலின் பொருட்டு வந்த அழகிய ஆரணங்கு ஒருத்தியும் அவளது தோழியும் பொழிலிடத்து விளையாடி நின்றனர். அதுகால் வேட்டையின் காரணமாக அங்கு ஒரு தலைவன் வந்தான். வந்த அவன் ஆரணங்கின் அழகில் ஈடுபட்டு செய்வதொன்றும் அறியாது நின்றான். இந்நிலையில் ஒரு களிறானது கண்டோர் கலங்கப் பிளிறிக்கொண்டு அங்கு வந்தது. பீதியடைந்த அப் பெண்கள் இருவரும் நடுங்கி நாண் துறந்து அத்தோன்றலை விரைந்தடைந்து வெறியுற்ற மயிலைப்போல் வெளிறி நின்றனர். இது கண்ட தலைவன் தயங்காது, ஓரம்பினை எடுத்துக் களிற்றின் முகத்திலே அழுந்த எய்ய, கனல் மிகு களிறும் காற்றினைப்போற் கடிதிற் சென்று காட்டினுள் மறைந்தது. பின்னர் தலைவன் தன் 'மன நிலையை எடுத்துரைத்து அவள் மனம் ஒப்பக் கொடுப் போரும் அடுப்போரும் இன்றித் தலைவியின் அன்பைப் பெற்றான். பின்னர் தலைவியும் தோழியும் தங்கள் பார்வையால் அக் குரிசிலுக்கு நன்றியைத் தெரிவித்து நின்றனர்.

அடுத்து இருவரும் தலைவனை விட்டு நீங்கி - அருகிலிருந்த ஆற்றுக்குச் சென்று அதனிற் குதித்து நீராடினர். குறிஞ்சிக் கடவுளாகிய குமரனை நினைத்து மலையில் உறையும் தெய்வ மகளிர் கைகோத்து ஆடுவதுபோல இருவரும் கைகோத்துக்கொண்டு விளையாடுகையில், இடிந்த கரையிலுள்ள வாழைமரம் நீரால் இழுக்கப்பட்டாற்போல நீரோட்டம் அவ்விருவரையும் இழுத்துச் சென்றது. இருவரும் அச்சத்தால் கூக்குரலிடவே, அது கேட்டு அங்கு