பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 14 –

செந்நாய், மரையினம் முதலியவற்றைப் புலியானது கொன்று தின்னும். இதற்கும் வேழத்திற்கும் நடக்கும் போரினைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். யானையைப் புலி வெற்றிபெறுதலும் உண்டு; யானையால் தாக்கப்பட்டு புலி வலியிழத்தலும் உண்டு. சிவந்த கண்ளையும், உடலில் வளைந்த கோடுகளையும் உடைய இவ்விலங்கு இருந்தபடியே இரு பக்கத்தினையும் பார்க்கும் இயல்புடையது. வேங்கையின் பூத்த கிளை இதனது உடலுக்கும், கடலொலி இதனது முழக்கத்திற்கும் ஒப்புமையாகப் பேசப்படுகின்றது. ஆண் புலி ’ஏற்றை' என்று இலக்கியத்தில் எடுத்தியம்பப்படுகின்றது.

புலிப்பல் தாலி

குறிஞ்சி நிலப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இயற்கையிலேயே கொடிய விலங்குகளுக்கு இடையே வாழ நேர்ந்ததால் அவர்களது விளையாட்டெல்லாம் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொல்வதிலும், காட்டுப் புனங்களிலே காவல் புரியும் கன்னிப் பெண்களை அச்சுறுத்தும் புலி, யானை முதலியவற்றைக் கொன்று பின்னர் அப் பெண்களிடம் அன்பு காட்டுவதிலுமே வளர்ந்தது. மேலும் மறத் தமிழர்கள் வீரமிக்க புலிகளைக் கொன்று தங்கள் வீரத்திற்கு அறிகுறியாகக் கொணர்ந்த புலிப் பற்களை மகளிர் மகிழ்ச்சியுடன் அணிந்துகொண்டனர். இப்பழக்கமே நாளடைவில் தாலிகட்டிக்கொள்ளும் வழக்கமாயிற்றென்று அறிஞர் பெரு மக்கள் கருதுகின்றனர்.

வாழ்க குரங்கினம்!

டார்வின் கொள்கைப்படி குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதனாவான். அத்தகைய குரங்கினைப்பற்றிய பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அப்