பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 15 —

பாடல்கள் படிக்கப் படிக்கத் தெவிட்டாத இன்பம் பயப்பனவாகும். ஆண் குரங்கு, கடுவன், கலை என்றும், பெண், மந்தி என்றும், குட்டி, குருளை, பார்ப்பு, பறளை என்றும் வழங்கப்படுகின்றன. கடுவனும் மந்தியும் ஒன்றோ டொன்று அன்புபூண்டு வாழும் வரலாறுகள் சில குறுந்தொகை என்னும் நூலில் காணப்பெறுகின்றன.

முசு, ஊகம் எனக் குரங்கு பலவகைப்படும். முசு என்பதின் முகம் கரியதாய் இருக்கும். ஊகம் என்பது கருங்குரங்கைக் குறிக்கும். இதன் உடல் முழுவதும் கரியதாகவும் முகம் வெள்ளையாகவும் இருக்கும். குரங்கினது வாய் சிவப்பாகவும், பல் கூரியதாகவும் இருக்கும். பொதுவாக இது நீண்டு வளர்ந்திருக்கும் மரங்களிலே ஏறிப் பாய்ந்து விளையாடும் இயல்பினது. மரங்கள்தோறும் சென்று பழங்களை எல்லாம் கடித்து உண்ணும்; பலாப் பழத்தைக்கூடத் தோண்டிச் சுளையை உண்ணும்.

மந்தியின் கற்பு

கணவனாகிய கடுவன் இறந்து விடுகின்றது. கைம்மை வாழ்வை விரும்பாத குரங்கு தானும் பத்தினிப் பெண்டிரைப்போல உடன் மாயத் துணிகின்றது. ஆனால் மரமேறவும் தெரியாத குட்டியிடத்துள்ள பாசம் முதலில் தடை செய்கின்றது. எனினும் மனத்தினைத் தேற்றிக் கொண்டு தன் குட்டியினை இனத்திடத்தே கையடை கொடுத்துப் பின் உயிரை மாய்த்துக்கொள்கின்றது. இதனை,

"கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி"

என்று குறுந்தொகை கூறுகின்றது.