பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

–- 16 —

திருட்டுக் குரங்கும் முரட்டுக் குரங்கும்

பிறர் சோர்வுற்றிருக்கும் நேரத்தை அறிந்து அவர்களிடம் உள்ள உணவுப் பொருட்களைக் கவர்ந்து செல்வதில் மந்திக்கு நிகர் மந்தியேதான். குன்றா அழகுடைய குறிஞ்சியில் கரிய மலையிலுள்ள அகன்ற பாறையினிடத்து சிவந்த தினை பரப்பப்பட்டிருந்தது. குறிஞ்சி நில மகளாகிய கொடிச்சி இத் தினையினைக் காவல் காத்துக்கொண் டிருந்தாள். இதே நேரத்தில் சில பெண் குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் தினையைக் கவருதற்பொருட்டுச் சிறிது தூரத்தில் காத்திருந்தன. தினைப்புனம் காப்பதில் சிறிது சோர்வுற்ற கொடிச்சி சுனைநீர் குடைதற்பொருட்டு சுனையிற் பாய்ந்தனள். இதனைக் கண்ட பெண் குரங்கு தன் குட்டிகளுடன் மரக்கிளையினின்றும் இறங்கிப் பாய்ந்து சென்று அத்தினையைக் கைக்கொண்டன. இக்காட்சியினை இருந்தையூர்க் கொற்றன் என்ற புலவர் பின் வருமாறு சித்தரிக்கின்றார்.

"திரைவளை முன்கை நேரிழை மகளிர்
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்."

முரடர்கள் எப்பொழுதுமே பின்வரும் விளைவைக் கவனியாதே காரியத்தில் இறங்குவர். இதே நிலையில் முரட்டுத்தன முள்ள, பயமே இன்னதென்று அறியாத, வலிய விரல்களையுடைய ஒரு குரங்குக்குட்டி மலையின் கண்ணுள்ள இனிய தேன் கூட்டைக் கலைத்துக் களிப்படைந்தது. இதனால் கலைக்கப்பட்ட ஈக்கள் கிளர்ந்து எழும்பி மொய்த்துக்கொள்ளவே, அது வெருவி நீண்ட மரக்கிளையிற் பாய்ந்தது. இதனைக் கபிலர் கவியோவியமாகக் தீட்டியுள்ளார். அது பின் வருமாறு: