பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

எல்லாரானும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் - என்பது உரைப் பகுதி. வேங்கடம் நிலம் கடந்த நெடு முடி யண்ணலாகிய திருமாலுக்கு உரியது என்பது, பிற்காலத்தவராகிய தச்சினார்க்கினியரின் கருத்து. இவர் போன்ற அந்தணர்கட்கும் சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும் பிடிப்பு. உண்டு. வைணவ அந்தணர்களே மறந்தும் புறம் தொழார். சைவம் சார்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இங்கே ஆராய வேண்டும்.

நாமம் சாத்தல்

சேற்றூர் இராமசாமிக் கவிராயரின் மகனாரும் 19ஆம் நூற்றாண்டினருமான அருணாசலக் கவிராயர் என்பவர் வேங்கடம் பற்றிப் பின் வருமாறு ஒரு பாடல் பாடியுள்ளார். அதாவது:

"வடவேங் கடமலையில் வாழ்முருகா நிற்கும்
திடமோங்கு நின்சீர் தெரிந்து - மடமோங்க
நாமத்தைச் சாத்தினார் நம்மையென் செய்வாரோ
காமுற்றிங் காரிருப்பர் காண்"

- (தனிப்பாடல்)

என்பது பாடல். வேங்கட மலையில் முதலில் முருகன் சிலை இருந்ததாகவும், பின்னர் முருகன் சிலையை நெற்றியில் நாமம் சாத்தித் திருமாலாக்கியதாகவும் கவிராயர் கூறியுள்ளார். இஃது உண்மையில்லை, எனில் எத்தனையோ ஊர்கள் இருக்க, வேங்கடத்தைப் பற்றி மட்டும் இவ்வாறு பாடுவதற்குக் கவிராயருக்குப் பைத்தியமா என்ன? எண்ணுக.