பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளுவர் கண்ட தூதர்

15

அவனமைச்சர் துணை வேண்டுவதாயிற்று. இச்செய்தியினைக் கூறின் இவர் நமக்கு ஏதம் விளைப்பர் என்று அஞ்சி ஒழியாது அனைத்தும் உரைத்தற்குத் துணிவும் வேண்டுவதாயிற்று. யாவரானும் தெளியப்படுதல் நம்பப்படுதற் பொருட்டு வாய்மையும் வேண்டுவதாயிற்று. தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சித் தன் அரசனுக்குத் தாழ்வு தரும் சொல்லை மறந்தும் சொல்லாத திண்மை வேண்டுமாதலின் அதனை வாய்சோரா வன்கண்மை என்று குறிப்பிட்டார். வேற்று வேந்தரிடைக் கூறும் அச்சொல் தன்னுயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சி ஒழியாது, தன் அரசன் சொல்லியவாறே சொல்லும் உள்ளுரமும் வேண்டும். ஆதலின்,

“இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாம் தூது”

என்று தூதிலக்கணத்தை அறுதியிட்டோதினார் திருவள்ளுவர்.

பெருந்தேவனார் பேசுவது

இவ்வாறு திருவள்ளுவர் வகுத்துரைத்த தூதிலக்கணத்தையெல்லாம், தொகுத்துப் பழந்தமிழ்ப் புலவராகிய பெருந்தேவனார் மூன்று வெண்பாக்களால் மொழியுந் திறம் படித்து இன்புறற் பாலதாகும்.

“அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை-நன்கமைந்த
சுற்ற முடைமை வடிவுடைமை சொல்வன்மை
கற்றடங்கல் தூதின் கடன்.”