பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

இலக்கியத் தூதர்கள்

முடியில் அணிந்துள்ள ஆலமுண்ட நீலகண்டனைப் போல நீ எந்நாளும் மன்னி வாழ்வாயாக பெரிய மலையின் அரிய பிளவில் தோன்றிய நெல்லி மரத்தில் பல்லாண்டுகட்கு ஒரு முறை பழுப்பதாய கனியின் சிறப்பினை என்பாற் சிறிதும் குறிப்பிடாது மனத்தின் கண் மறைத்தவனுய் யான் இறவா திருக்குமாறு அருளுடன் ஈந்தனையே! நினது அன்பை என்னென் பேன்!” என்று அவனை வாயார வாழ்த்தி மகிழ்ந்தார்.

புலவர்கள் போற்றுதல்

அதியமான் அறிவிற் சிறந்த ஒளவையாருக்கு அமுத நெல்லிக்கனி அளித்த அருஞ்செயலைப் பிற புலவர்களும் வியந்து பேசினர். ‘மால்வரைக், கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி, அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த அதிகன்’ என்று நல்லுரர் நத்தத்தனார் என்னும் புலவர் நயந்து போற்றினார். இனிய கனியைப்பற்றிக் கூறவந்த உரையாசிரியராகிய பரிமேலழகர், ‘ஒளவையுண்ட நெல்லிக்கனி போல அமிழ்தாவனவற்றை என்று பாராட்டினர்.

ஒளவையாரின் அரசியற் பணி

கொடை வள்ளலாகிய அதியமான் உடல்வலியும் படைவலியும் பெரிதும் படைத்தவன். அதனால் அவன் போர்வேட்கை மிக்க பெருவீரனாய் விளங்கினான். அவனுக்குப் பகைவரும் பலராயினர். அப்பகைவரால் அதியமானுக்கு ஊறு நேராவாறு காப்பதைத் தமது கடமையெனக் கருதினார் ஒளவையார். தம்மைப் பேணும் மன்னனும் அவன் நாட்டு மக்களும் அமைதியான நல்வாழ்வை நடத்த வேண்டுமே என்று கருத்துட் கொண்டார். ஆதலின் தகடூர் நாட்டின் மீது படையெடுக்க முற்படும் பகைவர்களைப் பரிசிலாள