பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாதவி யனுப்பிய தூதர்

47

லாசிரியன், யாழாசிரியன் ஆகியோர் அரங்கில் உடனிருந்து துணைபுரிந்தனர். மாதவி அவ்வரங்கிலே வலக்காலை முன் வைத்து ஏறி, வலத்தூணைப் பொருந்தி நின்றாள். மங்கல இசை முழங்கியது. அவள் பொன்னலாகிய பூங்கொடி பாங்குற ஆடுவது போல் நாட்டிய நூலின் இலக்கணமெல்லாம் நன்கு கடைப்பிடித்து ஆடினாள்.

கலையரசி பெற்ற சிறப்பு

மன்னன் அவள் கலைத்திறங் கண்டு வியத்து மகிழ்ந்து போற்றினன். ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னைப் பரிசாக அளித்தான். ‘தலைக்கோல் அரிவை’யென்னும் தலைசிறந்த விருதினை வழங்கினான். பச்சை மணிமாலை யொன்றையும் இச்சையோடு அளித்து இன்புற்றான். இவ்வாறு மாதவியின் ஆடற்கலை அரங்கேற்றம் அழகுற நடைபெற்றது. சித்திரா பதியும் அவளைச் சேர்ந்தோரும் சிந்தை மகிழ்ந்தனர். மாதவி கலையரசியாகத் தலைசிறந்து விளங்கத் தொடங்கினான்.

பணிப்பெண்ணைப் பணித்தல்

மனையகம் புகுந்த மாதவி, பணிப்பெண் ஒருத்தியை அழைத்தாள். மன்னன் வழங்கிய மரகத மாலையை அவள் கையிற் கொடுத்தான். “இதனைக் கையில் ஏந்திச் செல்வக் காளையர் வந்து சேரும் நாற்சந்தியில் நிற்பாயாக. இம்மாலைக்கு விலையாக ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னை அளிக்கும் இளைஞனை நமது இல்லத்திற்கு அழைத்து வருக. அவனையே என் காதலனாக யான் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறியனுப்பினாள்.