பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டவர் விடுத்த தூதன்

83

கண்ணன் அறிவுரையும் அறவுரையும்

இவ்வாறு கூறிய துரியோதனனின் கொடுமொழிகளைக் கேட்ட கண்ணபிரான், “அவர்கட்குரிய நாடு முழுவதையும் கொடுப்பதற்கு விருப்பமில்லையானால் அதிற் பாதியாவது கொடு” என்றான். அதுவுங் கொடுக்க முடியாதென அவன் மறுக்கவே, கண்ணன், “ஐந்து பேர்களுக்கும் ஐந்து ஊரேனும் உதவுக” என்று கேட்டான். “காட்டில் திரிந்து நாட்டுள் புகுந்த அவர்கட்கு நாடும் ஊரும் வேண்டுமோ? ஐந்து வீடு கொடுப்பினும் அவர்கள் அவற்றை மறுப்பார்களோ?” என்று மறுமொழி பகர்ந்தான் துரியோதனன். அதனைக் கேட்ட கண்ணன், “தந்தையின் காதலுக்காகத் தன் தம்பிக்கு இந்த வாழ்வையும் அரசையும் கொடுத்த நின் குலத்து அரசன் ஒருவனும் இந்த அவையில் இருக்கிறான்; அவ்வாறாக இந்த நாடு முழுமைக்கும் உரிமையுடையவர்க்கு ஐந்து ஊர்களையேனும் நீ உதவமாட்டேன் என்றால் உனது அரசாட்சி அறநெறியுடையதாகுமோ?” என்று இடித்துரைத்தான். இதைக் கேட்ட துரியோதனன், “இவ்வுலகம் ஆண்மையுடையவர்க்கே உரியதாகும். இதற்கு உரிமை வேண்டுவதில்லை” என்று விளம்பினான். “அங்ஙனமாயின் போர் செய்வதற்காவது உடன்பட்டிருப்பதாக உறுதிமொழி கூறிக் கையடித்துத் தருக” என்று கண்ணன் கூறினான்.

துரியோதனன் பழித்துரைத்தல்

பொய்யனாகிய துரியோதனனுக்குப் புண்ணியனாகிய கண்ணன் புகன்ற மொழிகள் மேலும் சினத்தையே விளைத்தன. அவன் கண்ணனைப் பலவாறு இழித்தும் பழித்தும் உரைத்தான். யானைகள் பகை