பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டவர் விடுத்த தூதன்

85

என்னவென்று உசாவினான். “ஒருவன் நடக்கவேண்டியவற்றை ஆராய்ந்து பாரானாயினும், அமைச்சர்கள் அறிவுரையைக் கேளானாயினும், அழிவை எண்ணாதவனாயினும், நாவினைக் காவானாயினும் அத்தகையோனுக்குத் துணையாகச் சென்று போரில் இறப்பது வீணென்று உலகம் கூறும் ; அங்ஙணமிருக்கத் துரியோதனன் பொருட்டுப் போர்புரிந்து ஏனோ வீணில் இறக்கவேண்டும்? இவ்வுலகமக்கள் தமக்குச் செல்வம் வந்து சேரும் பொழுது அதற்குக் காரணமான தெய்வத்தைச் சிறிதும் போற்றமாட்டார்கள் ; எதனையும் எண்ணிப் பார்த்துப் பேசமாட்டார்கள்; உறவினர் என்றும் உற்ற நண்பர் என்றும் உள்ளத்திற் கொள்ளார்; தாங்கள் வெற்றியடைவது பற்றி எண்ணுவார்களே யல்லாமல், தம் பகைவர்களின் வலிமையை எண்ணிப்பாரார் ; ஊழ்வினையின் விளைவையும் உற்றுநோக்கார் நினைக்கவும் தொழவும் எட்டாத சிறப்புடைய நீ இங்கு எழுந்தருளப் பெற்றும் துரியோதனன் நின்னைப் போற்றாது ஒழிந்தான்; உறவினருடன் வாழ வெறுத்தான்; அவன் கூறிய கொடுஞ் சொற்களை என்னால் பொறுக்க முடியவில்லை; அதனாலேயே என் வில்லை முறித்தெறிந் தேன்” என்று விதுரன் விளம்பினான்.

“செல்வம்வந் துற்ற காலைத்
தெய்வமும் சிறிது பேணார்;
சொல்வன அறிந்து சொல்லார் ;
சுற்றமும் துணையும் நோக்கார்
வெல்வதே நினைவ கல்லால்
வெம்பகை வலிதென் றெண்ணார்;
வல்வினை விளைவும் ஓரார்
மண்ணின்மேல் வாழும் மாந்தர்.”