பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


23. தாழை மலர்த்தாது மணத்துளாகப்; தாழை விழுதுகளைப் புனைந்து மகளிர் ஊஞ்சலாடினர்; தாழை, விழுது வீட்டிற்கு வண்ணமடிக்கும் துகிலிகையாகும்.

24. நீர்வேட்கை கொண்ட யானை மலைப்பகுதியில் மராமரத்து மலர் உதிர்வதை வெள்ளிய மழைத்துளி விழுவதாக எண்ணி அங்குமிங்கும் ஒடி அலையும்.

25. பித்திகை முகை ஓரளவு கூரியது. முடங்கல் தீட்டுவோர் இதனை எழுத்தாணியாகப் பயன்படுத்தினர். பித்திகை அந்திக் காலத்தில் மலரும். கூதிர்ப் பருவத்தில் பகற்போதில் வானம் இருண்டிருக்கும் அக்காலத்தில் பித்திகை அரும்புகளை கொய்து பூந்தட்டில் வைப்பர். அது மலர்ந்து மணம் வீசினால் மாலை வந்தது எனத் தெரிந்து மகளிர் விளக்கேற்றுவர்.

26. இலுப்பைப் பூ இனிப்பானது. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். வெளவால் வேம்பம் பழத்தைத் தின்னும். அதில் வெறுப்புத் தோன்றின் அக் கைப்புச் சுவை மாற இனிப்புள்ள இலுப்பைப் பூக்களைத் தின்னும்.

27. மயிலை மலர் நள்ளிரவில் பூத்து மணம் பரப்புவதால் நள்ளிருள் நாறி எனப்பட்டது.

28. பாதிரிப்பூ குடி நீருக்குத் தன் மணத்தை ஏற்றும். ஆதலால் மலர்ந்த மலரைப்புதிய மண்பானையில் பெய்து வைத்துப் பின்னர் எடுத்துவிட்டு அப்பானையில் நீர் ஊற்றி வைப்பர்.

29. பரத்தையர் தமக்கு இசைவாரை அறிய வேழப் பூவைப் பயன்படுத்துவர். நள்ளிரவில் இப்பூவை விற்பது போன்று கையிற் கொண்டு திரிவர். எதிர்ப்படும் ஆடவர் ஏற்றால் தமக்கு இசைந்த தாகக் கொள்வர்.

30. மூங்கிற் பூவில் காய் தோன்றிக் கணியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கிலரிசி எனப்படும். மலை நாட்டுக் குறவர் இதனை உணவாகக் கொண்டனர். 'வேரல்' என்னும் சிறு மூங்கிலரிசி மிகுதியும் விரும்பிக் கொள்ளப்பட்டது.

31. வண்டுண்ணா மலர் என்று ஒன்றுமில்லை.

32. முசுண்டை மலர் நடுயாமத்தில் புதர்களில் மலரும். இது கூதிர்ப் பருவத்தில் வானம் மழைபெய்து நின்று தெளிந்திருக்கும் போது விண்மீன்கள் பளிச்சென்று தெரிவது போன்றிருக்கும்.