பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



ஐம்புலன்களால் (Senses) அறிவது பொது அறிவு. பிறரது அனுபவத்தைக் கேட்பதிலும், எழுதிய நூல்களைப் படிப்பதிலும் பெறுகிற அறிவு படிப்பறிவு.

புலன்களால் அறிவு பெறாதவனை மரம் என்பார்கள். குறிப்பறிய மாட்டாதவன் நம்மரம் என்றாள் ஒளவைப்பாட்டி.

மரம் போன்ற மனிதனைத்தான் மரன் என்றனர். கொஞ்சம் பரவாயில்லை என்று மரன்போல் ஆட்களைத் தெரிந்து கொண்டு, பாமரன் என்றனர். பாமரர்களிலும் சற்று மேலானவரைக் குமரன் (கு-இருட்டு) என்றனர்.

இப்படி மனிதன் மேம்பட்டு வருகிறபோது, அவன் பண்பாடுகளில் பலம் பெற்றவனாக மிளிர்கிறபோது, இப்படித்தான் மனிதன் என்பவன் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறபோது அவனை 'அறன்’ என்றனர்.அறன் என்பவன் ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று அர்த்தம்.

அறன் என்பவன் எப்படி இருப்பான் என்று விளக்குவதற்காக வள்ளுவர் அறன் சிறப்பு என்று ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார்.

ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கப் பண்புகளில் உயர்ந்தோங்கிட வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தின் வெளிப்பாடு, அவனவன் கைக்குள்ளே அடங்கியிருக்கிறது.

இயற்கையின் பிரிவுகளை பஞ்சபூதம் என்றனர். நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்பன.

மனித உடலின் உறுப்புகளை பஞ்சேந்திரியம் என்றனர். கண், காது, மூக்கு, வாய், மெய் என்பன.

பஞ்சபூதங்களைப் போலவே உடலமைப்பும் உருவாகியிருக்கிறது. நிலத்திற்கு உடல், நீருக்கு உதிரம். காற்றுக்கு