பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

75



இந்தப் புலன்களைத் தான், திருமூலர் பசுக்கள் என்றார்.

இந்தப் பட்டிப்பசுக்களை, பண்பாற்றல் மிகுந்த குட்டிப் பசுக்களை, ஊட்டிவளர்த்தால், கட்டிக்காத்தால், ஊற்றுப் பசுக்களாய் மாறும். குடங்குடமாய் பாலைச் சொரியும் என்கிறார்.

ஆனால்?

ஆனால், பசுக்களை பாதுகாக்காமல் விட்டு விட்டால். அவை வெறித்துத் திரியும். வீணாய் அலையும். வெகுண்டுத் துள்ளும்.

இந்தப் பசுக்களை சும்மா இருக்க விடாமல். விரட்டித் தொல்லைப் படுத்துகின்ற உடன் பிறந்தே கொல்லும் பகைகள், உடலுக்குள்ளே நிறைய இருக்கின்றன என்கிறார் சித்தர்.

பசுக்களாகிய புலன்களை, பாடாய் படுத்துகிறவை எவை எவை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

கூகை என்கின்ற அறியாமை, பாம்பாகிய காமம், பசுங்கிளியாகிய அறம், பூனையாகிய பாவம், நகையாகிய சிற்றறிவு, காடை என்கிற குரோதம்.

இந்த கோட்டான், பாம்பு, பூனை, நாகை, காடை என்கிறவை பசுக்கள் மேல் அமர்ந்து கொண்டு, அமைதியாக இருக்கவிடுவதில்லை.

பசுக்களை ஆட்டிப் படைக்கின்றன. அலையாய் அலைய விடுகின்றன. மேயவிடாமல் விரட்டுகின்றன. பால் சுரக்க விடாமல் காயவைக்கின்றன.

இந்தப் பசுக்களுக்கு ஆறு பகைகள் கூடவே வாழ்கின்றன. இந்த ஆறுபகைகள் செருக்கு, சினம், சிறுமை, பொறாமை, பேராசை, மாணாவுவகை என்பன.