உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியிடுவோர் குறிப்பு பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சியுரைத் தொகுதி ஒன்றை வெளியிடுவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். பேராசிரியர் அவர்களைத் தமிழுலகில் அறியாதார் யார்? அவர்கள் பதிப்பாசிரியராக விளங்கிப் பதிப்பித்து வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி (தமிழ் லெக்ஸிகன்) நம் தமிழிற்கு ஒரு செல்வமன்றோ? அகராதி மட்டுமா? அகராதி நிலையில் பண்டை நாளில் உதவிய எத்தனையோ நிகண்டு களை அவர்கள் பரிசோதித்து வெளியிட்டுள்ளார்கள். அச்சில் வாராத பல தமிழ்-இலக்கிய இலக்கண நூல்களைப் பிழையற அச்சு வாகனமேற்றியும் தமிழன்னைக்குப் பெரும் பணி புரிந்துள்ளார்கள். அவர்களுடைய பதிப்புக்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட சிறந்த அம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. அந்நூல்களுக்கு அவர்கள் எழுதியுள்ள முன்னுரைகள் ஆராய்ச்சி நலம் சிறந்து விளங்குகின்றன. இலக்கிய ஆராய்ச்சி, இலக்கண ஆராய்ச்சி, சரித ஆராய்ச்சி, மொழி - ஆராய்ச்சி, சமய ஆராய்ச்சி, கவிதை- ஆராய்ச்சி என்றிப்படியாகப் பல துறைகளிலும் ஆராய்ந்து, வையாபுரிப் பிள்ளையவர்கள் சிறந்த பொருள்களை வெளிப் படுத்தி வருகிறார்கள். அவற்றுள் இலக்கிய ஆராய்ச்சி பற்றிய பதினாறு கட்டுரைகள் இத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இக் கட்டுரைக ளெல்லாம் தமிழ் மணமும், ஆராய்ச்சி நலமும் செறிந்து கற்பார்க்குப் பெரு விருந்தாய் அமைந் துள்ளன. ஒவ்வொன்றிலும் இதுவரைப் பிறரால் அறியப் படாத புதிய முடிபுகள் பல ஆராய்ந்து நிறுவப்பட்டுள்ளன. தமது கொள்கைகளை நிறுவும் பொருட்டு ஆசிரியர் தரும் காரணங்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் முறைப்பட அமைந்து கற்பார் மனத்தைக் கவர்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/3&oldid=1522974" இலிருந்து மீள்விக்கப்பட்டது