பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

தொகுத்து அளித்தான். நற்றிணைப் பாடல்களைப் போன்றே, குறுந்தொகைப்பாடல்களும் ஐந்திணை ஒழுக்கம் பற்றிப் பேசுகின்றன. இப்பாடல்கள் மிகச் சிறந்தவையாகும். அழகான உவமைகளால் காதல் ஒழுக்கத்தைத் துாய்மையாக இந்நூலில் புலவர்கள் சித்திரித்துள்ளனர். சிறிய பாடல் களாயினும் பல அரிய செய்திகள் நிறைந்து விளங்குகின்றன. எனவே குறுந்தொகைப்பாடல் ஒவ்வொன்றும் சிந்தைக்கு விருந்தாகும். முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை என்று ஒரு சிலர் கூறுவர். இந்நூல் அகவற் பாக்களால் ஆனது. இருநூற்று ஐந்து புலவர்களால் பாடப்பட்ட பாடல்களைக் கொண்டது. இந்நூலில் காணும் ஒவ்வொரு பாடலும் இனிமையும் எளிமையும் கொண்டு விளங்குகிறது. மேலும் பல நீதியினையும், உவமையையும், இறைச்சியையும் இப்பாடல்களிற் காணலாம்.

     காதல் மணத்தின் சிறப்பினை இந்நூலில் கானும் ஒரு பாடல் நன்கு எடுத்துக் காட்டுகின்றது. சாதிபேதமற்ற முறையில் காதலரிருவர் கருத்தொருமித்துக் களவு மணம் புரிந்தனர். ஆனல் காதலி தன்னைக் காதலன் ஒரு வேளை கைவிட்டு விடுவான் என்று கருதிக் கவலை கொண்டாள். அதனேயறிந்த தலைவன் அவளைத் தேற்றுவான் வேண்டி,
              
         "யாயும் ஞாயும் யாங்கு ஆகியரோ ! 
          எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ? 
          யானும் நீயும் எவ்வழி அறிதும் ? 
          செம்புலப் பெயல் நீர் போல 
          அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" (பா.40)

என்று கூறுவதாக ஆசிரியர் பாடியுள்ளார்: இதில் செம்மையான நல்ல நிலத்திலே பெய்த மழை நீர்போல அன்புடைய நெஞ்சம் இரண்டும் ஒன்றாகக் கலந்து விட்டன என்று சிறந்த உவமையின் வாயிலாக உண்மைக் காதலை ஆசிரியர் உணர்த்தி விருப்பது உள்ளுந்தொறும் உவகை ஊட்டுவதாகும். இதனைப்