உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

எண்ணற்றன தோன்றியிருத்தல் வேண்டும் என்பது உறுதியாம்.

வேத்தியல், பொதுவியல் எனும் இருவகைப்பட்டு, முறையே அரசர்களாலும், மக்களாலும் மதித்து வளர்க்கப்பெற்ற சங்ககாலத் தமிழ் நாடகங்கள், பிற்காலச் சோழர் காலத்தே, கோயில் நாடகம், அரண்மனை நாடகம், மக்கள் மன்றத்து நாடகம் என மூன்றாய் வகைப்பட்டு வளர்ந்து வாழ்ந்தனவேனும், அந்நாடகம் பற்றிய இலக்கியங்கள் மட்டும் தோன்றாவாயின.

சங்க காலத் தமிழர்களால் பெரிதும் பேணி வளர்க்கப் பெற்ற நாடக இலக்கியங்கள், பிற்காலத்தே பெரிதும் புறக்கணிக்கப் பெற்றன. அப்புறக்கணிப்பிற்குச் சமண, பெளத்த சமயங்களே காரணமாம். துறவறமே தூய அறமாம் எனக் கருதும் அவர்கள், நாடகம், அந்நெறிக்குத் தடையாய், இன்ப உணர்வினை ஊட்டுகிறது என்ற எண்ணத்தால், நாடகங்களையும், நாடக இலக்கியங்களையும் வெறுக்கலாயினர். அதனால், சங்க காலத்திற்குப் பிறகு நாடக இலக்கியங்களும் மெல்ல மெல்ல வழக்கற்று மறைந்து விட்டன. சமணர், பெளத்தர்களின் தலைியீட்டிற்கும் தப்பிப்பிழைத்த பழந்தமிழ் நாடக இலக்கியம் சிலப்பதிகாரம் ஒன்றே; அதில் வரும் வேட்டுவ வரி, கானல் வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, வாழ்த்துக் காதை முதலாயின சிறந்த நாடகப் பகுதிகளாதல் காண்க.