பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மீண்டானல்லன். அவன் ஆண்மைச் சிறப்பறிந்து அக மகிழ்ந்து வாழ்த்திய அவ்வூரார், அவனைப் பல நாட்களாகப் பாராமையால் பெரிதும் வருந்தினர். அவ்வூர் வாழ் பெண்ணொருத்தி, ஒருநாள் அவன் வீடு சென்று, ஆங்கு அவன் தாயைக் கண்டு, அவளருகில் உள்ள தூண் ஒன்றைப் பற்றி நின்றவாறே. “அன்னாய்! பேரன்பு காட்டிப் பெற்ற உன்னையும் மறந்து பிரிந்து சென்ற உன்மகன் நெடு நாட்களாகியும் வந்திலனே: அவன் யாண்டுச் சென்றுளன்? எப்போது வருவன்? அவளைக் காண வேண்டின், யாங்குச் சென்றால் காணலாம்?” என்று தன் அன்பும் ஆர்வமும் தோன்ற வினவினாள்.

அது கேட்ட அத்தாய், “எங்கள் மீது பேரன்பு கொண்டு வந்து கேள்வி பல கேட்டு நிற்கும் உனக்கு என் நன்றி; பெற்ற மகன், என்னைத் தனியே விட்டுச் சென்றமை கண்டு வருந்தி நிற்கும் நினக்கு ஒன்று கூறுவேன் கேள்; காட்டில் பிறந்த புலிக்குட்டி, இளமைக் காலத்தில், காட்டிடையே உள்ள மலையிடத்தமைந்த குகைகளில் இருந்து வாழ்கிறது. அது அங்கு வாழும்வரை, அதற்கு இடையூறு வாராவகை காத்துகின்ற அதன் இனப் புலிகள், அது எப்போதும் அக்குகையிலேயே வாழ வேண்டும் என விரும்புவதில்லை. அவை விரும்பினும், அக்குட்டி, சிறிது வளர்ந்ததும், அக்குகை வாழ்வை வெறுத்து வெளியேறிக் கன்னி வேட்டையாகப் பெரிய களிற்றினைக் கொல்வதையே விரும்பும்; அதுவே அதன் இயல்புமாகும்.