பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

பொருளின்பால் அச்சம் உண்டாம்; அதன் ஆக்க ஆற்றலை அறிந்தார்க்கு, அதன்டால் அன்பு உண்டாம். ஒரு பொருளின் அழிவாற்றல் அறிந்து அச்சம் கொண்டவர்க்கும், அதன் ஆக்க ஆற்றலை அறிந்து அந்நிலையே, அதன்பால் கொண்டிருந்த அச்சம் மறைய, அன்பு தோன்றும்.

உலகில் உள்ள எல்லாப் பொருள்களும், இவ்விரு ஆற்றல்களையும் கொண்டுள்ளன எனினும், மக்கள் உணர்விற்கு, ஆக்க ஆற்றலினும், அழிவாற்றலே முதற் கண் புலனாம்; ஒரு பொருளின் அழிவாற்றலை உணர்தல் எளிது; அதன் ஆக்க ஆற்றலை உணர்தல் அரிது. அழிவாற்றல் உடைய ஒரு பொருளை, ஆக்க ஆற்றல் உடையவாப் பயன் கோடல் அரிதின் முயன்றார்க்கே இயலும். ஆகவே, மன அறிவு வளர வளர, மக்கள், பொருள்களின் அழிவாற்றல் கண்டு அஞ்சுவதற்குப் பதிலாக, அதன் ஆக்க ஆற்றல் கண்டு அன்பு காட்டத் தொடங்குவர். அதன் விளைவாய், அச்சம் கண்கொண்டு நோக்கத் தலைப்படுவர். அச்ச வழிபாடும், அன்பு வழிபாடாய் மாறும்.

தமிழ் மக்கள், சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே, தமக்கு அச்சம் தரும் பொருள்களைக் கண்டு வழிபட்ட நிலையினைக் கடந்து, தமக்கு ஆக்கம் அளிக்கும் பொருள்களை, அவற்றின்பால் கொண்ட அன்பு காரணமாக வழிபடும் நிலையினைப் பெற்று விட்டனர். அதன் விளைவாய்த் தம் ஒளிகளாலும், தண் துளியாலும் தமக்கு மிகு பயன் அளிக்கும் ஞாயிறு திங்கள்களையும், மழையையும் வணங்கி வழிபட்டு வந்தனர். சிலப்பதிகாரம்