உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டி விழாக்கள்

63

ஆச்சரியம் என்ன? இலங்கைக்கு முதல் முறையாக வந்ததையும், பழந்தமிழ் நூல்களிலே கண்ட இயற்கை வளங்களை அங்கே நேரில் கண்டதையும் எடுத்துச் சொன்னேன். "இலக்கிய உலகில் உலா வரும்போது கண்ட காட்சிகளை இங்கே காண்கிறேன். பழந்தமிழர் வாழ்ந்த உலகத்தில் நிற்கிறோம் என்ற உணர்ச்சி உண்டாகிறது" என்று என் கருத்தை வெளியிட்டேன்.

பல காலமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இலக்கியத் தொடர்பு இருப்பதை விரித்துரைத்தேன். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காவியங்களில் வரும் வரலாறுகளில் இலங்கை இடம் கொண்டிருப்பதை எடுத்துச் சொன்னேன்.

"இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் பாலம் போட வேண்டுமென்று பாரதியார் பாடுகிறார், சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று அவர் சொல்கிறார். இலக்கியத்தின் உதவியால் முன்பே பாலம் இட்ட பெரியார்கள் பலர் உண்டு. சமீப காலத்தில் பாலமிட்ட பெரியார்களில் மிகச் சிறந்தவர் ஸ்ரீ ஆறுமுக நாவலர்" என்று சொல்லி நாவலரவர்களின் பெருமையை விரித்தேன்.

அப்பால் கவியின் இயல்பு, உணர்ச்சியை உருவாக்கிக் கவியாக வடிக்கும் திறமை, பாரதியார் கவிப்பண்பு முதலிய பல பொருள்களைப்பற்றிப் பேசினேன். ஒன்றே முக்கால் மணிநேரம் சொற்பொழிவு ஆற்றினேன். சபையில் இருந்தவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.