பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

இலங்கைக் காட்சிகள்

கூறினார். முதலில் பாரதியார் கருத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் நிறைய உணவுண்டு வாழும்போது ஒருவனுக்கு மாத்திரம் உணவு கிடைக்காவிட்டால் அந்த நிலையில் சுய நலச் சூழ்ச்சிக்காரர்களை ஒழித்துக் கட்டுவதைப் பற்றித் தான் பாரதியார் பாடுகிறார். இப்போது இந்தியாவில் எல்லோருமே உணவுத் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அந்தத் துன்பத்தை எல்லோரும் பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக வேறு நாட்டாரிடம் போய்ப் பல்லை இளித்துக் கொண்டு நிற்கவில்லை. செல்வம் படைத்த இலங்கை அரசாங்கம் என்ன செய்கிறது? உணவுக்காக ஊராரிடம் போய்க் கெஞ்சுகிறது" என்று அவர் சொன்னார். அப்போது அமெரிக்காக்காரர்கள் இந்தியாவுக்கு உணவுத் தானியம் அனுப்பலாமா வேண்டாமா என்று மீன மேஷம் பார்த்துக் கொண்டிருந்த காலம்; ஜவாஹர்லால் நேரு, நிபந்தனை போட்டுத் தருவதாக இருந்தால் யாரிடமும் ஓர் இம்மியும் ஏற்க மாட்டோம்" என்று வீர கர்ஜனை செய்த காலம்.

கனகரத்தினம் இந்திய அரசாங்கத்தைக் குறை கூறினார். தொண்டைமான் இலங்கை அரசாங்கத்தைக் குறை கூறினார். அந்த விழாவில் பேசிய வேறு சில அரசியல்வாதிகளாகிய தமிழர்களும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார்கள்.

கனகரத்தினம் விழாவைத் தொடங்கி வைத்த பிறகு நான் என் தலைமைச் சொற்பொழிவை ஆற்றினேன். புதிய இடம், ஆர்வமுள்ள மக்கள், நல்ல கூட்டம். ஆகவே எனக்கு ஊக்கம் உண்டாவதில்