பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

45

ஒரு பொதுக் கூட்டத்தில் மாலை ஒன்பது மணி வரையில் ஆஜராயிருந்துவிட்டு, வீடு சென்று “வீரகேசரி”க்கு விவரமாக எழுதிக் கொடுத்துவிட்டு, பிறகு பம்பாய் - மலாய் - சென்னைப் பத்திரிகைகளுக்கு எழுதி ஆகாசத் தபாலில் சேர்ப்பித்துவிட்டு, இரவு மூன்று மணிக்கு ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் தூங்கப்போவார் என்று அறிந்தேன். அவர் வாழ்க!

ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் இலங்கையின் பிரஜையாகத் தம்மைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார். இது இலங்கைக்கு லாபம்: இந்தியாவுக்கு நஷ்டம். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

கொழும்பில் நடந்துவரும் மற்றொரு தினப்பத்திரிகை “தினகரன்” பொதுவாக இது இலங்கை சர்க்காரை ஆதரிக்கும் பத்திரிகை. தமிழ்ச் சங்க விழா சம்பந்தமாகத் “தினகரன்” ஒத்துழைக்கவில்லை யென்றும், செய்திகளையே போடவில்லை யென்றும் சில தமிழன்பர்கள் குறிப்பிட்டார்கள். விழா நடந்த மறு தினம் பார்த்தால், “தினகரன்” மற்றப் பத்திரிகைகளைக் காட்டிலும் ஒரு படி அதிகமாகவே தமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல பத்திகள் பிரசுரித்திருந்தது.

இதிலிருந்து ஒன்று நிச்சயமாயிற்று. இலங்கையிலுள்ள தமிழர்கள் அரசியல் முதலிய துறைகளில் எவ்வளவு மாறுபட்டிருந்தாலும் தமிழ் மொழியைப் போற்றுவதில் அனைவரும் ஒன்று படுவார்கள் என்பதுதான். ஸ்ரீ தூரனுக்கும் எனக்கும் இது எவ்வளவு மகிழ்ச்சி அளித்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?