பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இலட்சிய வரலாறு

கிறது. சிறு கிராமம் முதற்கொண்டு பெரிய நகரம் வரையிலே செல்லுங்கள், செய்தியைச் சொல்லுங்கள், திராவிடர் கழகத்திலே ஏராளமாகத் தோழர்களைச் சேர்த்துக் காட்டுங்கள். தலைவர்கள ஆச்சரியப்படவேண்டும், அந்த அணிவகுப்பைக் கண்டு. ஆரியம் அலற, உலகம் உணர ஒருஅணிவகுப்புத் தேவை! விரைவாகத் தேவை! வேலை மிகுதியாக இருக்கிறது, விடுதலை முரசு கொட்டப்பட்டுவிட்டது. இன அரசுக்குப் போர், இறுதிப்போர் நடந்தாகவேண்டும். இன்றே கிளம்புக, திராவிடர் பாசறை நிறுவ, பலப்படுத்த!!

ஆந்திரமும், கேரளமும் இந்த வேகத்தைக் காணும்நாள் தூரத்தில் இல்லை. அதற்கான வழிவகையும் நிச்சயம் வகுக்கப்படும்.

இன்று நமது இனமிருக்கும் நிலைமை மாறித் திராவிடநாடு திராவிடருக்கே ஆகவேண்டும் என்பதுதான். அதைச்செய்யவே நாம், வடு நிரம்பியஉடலும், வைரம்பாய்ந்த உள்ளமும், சிந்தனை ததும்பும் மனமும், செய்வகை அனுபவமும் தெளிந்த, சிறைக்கோட்டத்துக்கும் வீட்டுக்கும் வித்தியாசமிருப்பதாகவே கருதாத, ஓய்வு தெரியாத ஒருபெரியாரின் தலைமையிலே கூடி நிற்கிறோம். அவர் களம்பல கண்டவர். போர்பல நடத்தியவர், போகவாழ்வை வெறுத்து ஏழை வாழ்வை நடாத்திவருபவர். அவருக்கு அநேக தாலமுத்து நடராஜன்கள் கிடைப்பர். புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோல வாலிபர்கள் வருகிறார்களே என்று ஆளும் கூட்டம் ஆயாசத்தோடு கூறும் விதத்திலே, வாலிபர்களை வரச்சொல்லும் வசீகரம் அவருக்கு உண்டு. அவர் நமக்குப்போதும். வேறுசிலருக்கு வேறுசிலர் தேவையாம்! நமக்கு அதுபற்றிக் கவலை வேண்டாம்! போரிடத் தெரிந்த பெரியார், போர்வீரர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்: "போர்வீரர்களே! வருக! வருக!" நமக்கு வேறு அறிக்கை வேண்டாம்- தேவையுமில்லை.

"உழைக்கவாருங்கள்; பிழைக்கும் வழி என்ன என்று என்னைக் கேட்காதீர்கள்! உங்கள் இனத்தை மீட்க வாருங்கள், அதற்கு ஏற்ற சக்தி உண்டா என்று என்னைக் கேட்காதீர்கள்!