பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

15


போருக்கு வாருங்கள்; அது எப்படி முடியும், எப்போது முடியும் என்று என்னைக் கேட்காதீர்கள்"- இதுவே பெரியாரின் அறிக்கை.

ஓய்வை விரும்புவோர் ஒதுங்கி நிற்கலாம், சாய்வு நாற்காலியினர் சாய்ந்து கிடக்கலாம், பதவிப்பிரியர்கள் பாதையை விட்டு விலகலாம்; மானத்தைப்பெற, உயிரையும் இழக்கும் மனப்போக்குடையோர் வரலாம்!!- சேலம் விடுத்த செய்தி அதுவே.

இலட்சிய விளக்கம்
திராவிட நாடு திராவிடருக்கே

இது ஒரு கட்சியின் முழக்கமல்ல; ஒரு இனத்தின் இருதயகீதம்! மூலாதார உண்மை. எங்கும் எந்தவகையான மக்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட உண்மை. இந்தக் கருத்தை, நாம் கூறுகிறோம் என்ற காரணத்தால், எதிர்க்கத்தான் வேண்டும் என்று எண்ணுபவர்கள், அலட்சியப்படுத்துபவர்கள், நமக்கல்ல நாட்டுக்குக் கேடு செய்கிறார்கள், தங்கள் இனத்துக்குத் துரோகம் செய்கிறார்கள்.

சின்னஞ்சிறு நாடுகள், இயற்கைவளமற்ற நாடுகள், இரவல் பொருளில் வாழ்வு நடத்தவேண்டிய நாடுகள்கூடத் தனி அரசுரிமை பெற்றுவிட்டன. இங்கோ, இலக்கியச்செறிவை இருஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்று வாழ்ந்துவந்த நாடு. இன்று மற்ற நாட்டுடன் பிணைக்கப்பட்டு, பிடி ஆளாகிக்கிடக்கிறது. தங்கள் வாழ்நாளில் தாய்நாட்டின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை உடைத்தெறிவதை, பெரும்பணி என்று கருதும் வீர்ர்களுக்கு அழைப்பு விடுகிறோம்; திராவிடநாடு திராவிடருக்கே என்பதை மூலை முடுக்கிலுள்ளோரும் அறியச் செய்யுங்கள்- அணிவகுப்பில் சேருங்கள் என்று கூறுகிறோம்.

நமது கொள்கையின் மாசற்ற தன்மையை, திட்டத்தின் அவசியத்தை, இலட்சியத்தின் மேன்மையை, அனைவரும் அறியும்படி, விளக்க, இந்த ஜூலை 1-ஆம்தேதி, திராவிடப் பிரிவினை