பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இலட்சிய வரலாறு


ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினோம். இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதங்கள் ஏலாதனவென்று விளக்கினோம். காரணங்களை அவர்கள் கதைகளால் வீழ்த்தவும், ஆதாரங்களை வெறும் அளப்பினால் அடக்கவும், சரித்திரத்தைச் சவடாலால் சாய்க்கவும், உறுதியை உறுமிக்கெடுக்கவும் நமது எதிரிகள் முனைந்து நிற்பதைப் பொருட்படுத்தாது நம்கடனை நாம் செய்தல் வேண்டும் என்று கூறினோம்.

இஸ்லாமியர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து தங்களின் தலைவரின் திட்டத்தின்படி பணிபுரிந்து வெற்றிபெற்றுவிட்டனர். வடக்கே இனஅரசு -பாகிஸ்தான்- ஏற்பட்டுவிட்டது.

அவர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போராடி வெற்றிபெற்றார்களோ, அந்த இலட்சியத்தை, அவர்கள் முழக்கமாகக் கொள்ளாததற்கு முன்பு நாம்கொண்டோம்; அவர்கள் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றாததற்கு முன்பு நாம் திராவிடநாடு திராவிடருக்கே என்று தீர்மானம் செய்தோம். நாடெங்கும், இந்த இலட்சிய்த்தை விளக்கிப் பிரசாரம் செய்தோம்... செய்தும் வருகிறோம்.

பாகிஸ்தான் தேவை என்பதற்குக் கூறப்பட்ட காரணங்களைவிட, அதிகமான, சிலாக்கியமான காரணங்கள், திராவிடத்தனி அரசு தேவை என்பதற்கு உள்ளன. ஆனால், திராவிடப் பெருங்குடி மக்கள், இதனை இன்னும் உணர்ந்ததாகக் காணோம்.