உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

27


ஆச்சாரியார் கேட்டார், ஆணவத்துடன். "ஒரு இராமசாமிக்காகப் பயந்து இந்தியை எடுத்து விடுவதா " என்று கோபித்துக் கூறினார். ஆனால் பாபம், புற்றிலிருந்து ஈசல் போல் கிளம்புகின்றனரே! இந்தச் சனியனுக்கு இவ்வளவு தொல்லை இருக்குமென்று தெரிந்திருந்தால் இந்தியைப் புகுத்தியே இருக்கமாட்டேனே " என்று அதே ஆச்சாரியார் அலறினார்! எதைக்கண்டு? நமது கட்சி அங்கத்தினர்கள் சட்டசபையிலே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடன் இருந்தனரா ? இல்லை! வேறு எதைக்கண்டு அந்த வேதியருக்குச் சோகம் பிறந்தது? நாட்டிலே, மூண்டுவிட்ட எதிர்ப்பைக் கண்டு ! பல ஆயிரக்கணக்காளகட்சி அங்கத்தினர்கள் முறைப்படி சேர்க்கப்படாமல், கட்சியின் கிளைகள் ஏற்படாமல், கல்லூரிகளிலே நமது குரல் கேளாமல் இருந்த நாளிலே இது சாத்தியமாயிற்று என்றால், கட்சி அங்கத்தினர்கள் குவிந்து, கிளைகள் ஆங்காங்கு தழைத்து, கல்லூரிகளிலே தளபதிகள் தயாரிக்கப்படும் இந்நாளிலே, தாலமுத்துவும் நடராசனும் பிணமாயினர் என்ற செய்தி இரத்தத்திலே சூடேற்றி வீட்டிருக்கும் இந்நாளிலே, புரட்சிக் கவிஞரின் புதுக்கருத்துக்கள் நமது புண்ணை ஆற்றிப் புதியதோர் வீரத்தை ஊட்டும் இந்நாட்களிலே, நடிகமணிகள் திராவிட நாட்டு விடுதலைக்காகக் கலையை வேலை வாங்கும் இந்நாட்களிலே, கம்பனைக் காப்பாற்றக் கலா ரசிகர்கள் ஓட்டை ஒடிசல் நீக்கப் பாடுபடும் இந்த நாளிலே, கொச்சியும் திருவிதாங்கூரும். மைசூரும் ஆந்திரமும் மாகாண மாநாட்டுக்குப் பிரதி நிதிகள் அனுப்பி யிருந்தன என்று "இந்து" பத்திரிகை எழுதித் தீர வேண்டி நேரிட்ட இந்த நாளிலே, திருநாமம் தரிப்பதை மறவாத திருவாளர் வீடுகளிலேயும், "பார்ப்பனத் தீட்டு" கூடாது, என்ற திடசித்தம் ஏற்பட்ட இந்த நாளிலே, தீப்பொறி பறக்கும் தீர்மானங்கள் இல்லையே என்று கோபித்துக் கூறும் தீரர்கள் திரண்டுவிட்ட இந்நாளிலே, காந்தியின் சம்பந்தியார் காங்கிரசிலே கள்ளத்தனமாக நுழைந்தார் என்று காமராஜர்கள் கூறக்கூடிய இந்நாளிலே, நாம், ஏன், சட்டசபைகளிலே நுழையாமலேயும். அந்தச் சபையில் நுழைந்துகொள்பவரை நமது இஷ்டப்படி நாட்டை ஆளச் செய்ய முடியாது என்று கேட்கிறோம் ?