உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூஜா மனோபாவம் கூடாது.

நாட்டை மீட்கும் நற்பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். இப்போது இங்கே இரண்டே கட்சிகள்தான் உண்டு: ஒன்று விடுதலைப் போர் புரியும் கட்சி, மற்றொன்று ஏகாதிபத்தியம். எனவே வேறு கட்சிகள் இருக்கக்கூடாது. நாடு விடுதலை பெற்றான பிறகு, நாட்டை ஆளும் நேரத்திலே கட்சிகள் இருக்கலாம்; போராட்டத்தின்போது கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். இன்றோ நாட்டுக்கு விடுதலை கிடைத்து விட்டது, ஆனால், காங்கிரசாருக்கு, வேறு கட்சியே இருக்கக்கூடாது ! எதிர்ப்பின்றி, ஏகபோகமாகத் தாங்களே நாடாள வேண்டும், நிர்வாகம் எவ்வளவு கேடுள்ளதாயினும் யாரும் எதிர்த்திடக் கூடாது என்ற எண்ணம் பலமாக ஏற்பட்டிருக்கிறது.

வெற்றிக் களிப்பே, இந்த விபரீத எண்ணத்துக்கு முக்கிய காரணம்; ஆனால் மூலகாரணம் வேறு இருக்கிறது.

என்ன தவறு செய்தாலும், சகித்துக்கொண்டு தவறுகளை வெளியே எடுத்துச் சொல்லவும் யாருமே இல்லை என்றால் மட்டுமே, தங்களால் ஆட்சியை நடத்த முடியும்; குறை கண்டுபிடிக்கப் பலருக்கோ சிலருக்கோ வாய்ப்பிருந்தால், தமது 'பிடி' தளர்ந்து விடும் என்ற அச்சம் அந்த மூலகாரணம்.

இது. குடி அரசுக் கோட்பாட்டுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது.

அறிஞர், டாக்டர் கிருஷ்ணலால் சீதரணி, இந்த போக்குக் கூடாது என்று தக்க காரணத்தோடு விளக்கியுள்ளார்.

புதிய நிலை நாட்டுக்குப் பிறந்து விட்டது; இப்போது பழைய 'பூஜா மனோபாவம்' நீடிக்குமானால் ஜனநாயகம் வளராது என்கிறார். அவருடைய கருத்துரை கீழே வெளியிடப் பட்டிருக்கிறது.