உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

61


உலகம் மாறிக் கொண்டிருந்த நாட்களில், உரிமைப்போர் முழக்கம் எங்கெங்கோ கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் விடுபடும் வழிவகை அறியாது, உதவிக்கோர் துணைகிடைக்காது; தன் பலத்துக்கு மேற்பட்ட பலத்தால் தாக்குண்டு, தத்தளித்துக் கொண்டிருந்தான். அவன் கரத்திலும் காலிலும் இருந்த தளைகளைவிட, அதிக பயங்கரமானதோர் தளை, அவன் கருத்திலே! திடீரென்று பூட்டப்பட்ட தளையுமல்ல—அவனுடைய வெள்ளை உள்ளத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, மெள்ள மெள்ள, கள்ளக் கருத்துக் கொண்டோர், பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பூட்டிய தளைகள், திக்குத் தெரியாத காட்டில், திரிந்து திகைக்கும். சிறு பறவைபோல, எந்தப் பக்கம் சென்றாலும் துறைமுகம் கிடைக்காது, கலங்கும் ஓடக்காரன்போல, தளைகளால் கட்டுண்டு தவித்துக் கொண்டிருந்தான்.

நெடு நாட்களாக இந்நிலை இருந்து வந்ததால் அவன், தன்னம்பிக்கையையும் இழந்து விட்டான்.

நெளிவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். தன்மேல் பூட்டப்பட்டுள்ளவை, தளைகள் என்று எண்ணுவதையும் நிறுத்த. முயற்சிக்கலானான், கண்களை மறைக்கும் துண்டுத் துணியையும் ஊடுருவித் தன் பார்வையைச் செலுத்த முயற்சித்துத் தோற்றதால், கண்ணுக்குப் பார்வை உண்டு என்ற எண்ணத்திலேயே சந்தேகம் கொண்டு விட்டான். நமக்கு விடுதலை இல்லை, விமோசனம் இல்லை—இவை அறுபடாத் தளைகள்—இது விடுபட முடியாத நிலைமை என்றே கூடத் தீர்மானித்து விட்டான்.

இந்நிலையை மாற்றலாம்—மாற்ற முடியும்—மாற்றிக் காட்டுகிறேன்—என்று கூற, இந்தத் தமிழகத்திலே, ஒருவர் மட்டும், துணிவு பெற்றார்—பணி புரியலானார்—படை ஒன்றைத் திரட்டினார்—கண்கள் மீதிருந்த துண்டுத் துணியைக் கிழித்தெறிந்தார்—தளைகளையும் நொறுக்கலானார்.