உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

இலட்சிய வரலாறு

நம்பிக்கையை இழந்து போயிருந்தவனுக்கு, முதலில் மிரட்சியே உண்டாயிற்று ! "சாத்யமற்ற காரியத்தைச் செய்ய முன்வந்திருக்கிறாய் ! முன்பு, என் கண்கள் மூடிக்கிடந்தன ! தளைகள் உள்ளன என்ற நினைப்பு மட்டுமே இருந்தது—அவை, எப்படிப்பட்டவை என்பதை நான் அறியவில்லை—கண் திறக்கப்பட்டு விட்டது. இப்போது, தெரிகிறது. தளைகள் மிகமிகப் பலமானவை என்று—எப்படி, இவைகளை நொறுக்க முடியுமா ? உன்னிடமோ சம்மட்டி இல்லை ! கரத்தாலேயே நொறுக்குகிறாய், அதனால் வேதனைக்கு ஆளாகிறாய்; பாபம் ! உன்னால் முடியாத காரியம் ! முயற்சியை விட்டுவிடு ! ஏதோ கண் திறந்திருப்பது போதும், வானத்தைக் காண்கிறேன், விண்ணிலே பறக்கும் பட்சிகளைப் பார்க்கிறேன்—அலையைக் காண்கிறேன்,— மகிழ்கிறேன்— இதுபோதும். இந்தத் தளைகள் உன் தாக்குதலால் அறுபடாது" என்று கூறினான்.

"ஆமாம் — ஆமாம்—பலமான தளை என்றார் அவர்.

"பலமான தளைகள் மட்டுமல்ல—இன்று நேற்று, ஈராண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு பூட்டப்பட்ட தளைகளல்ல, பலப்பல காலமாக இருந்து வரும் தளைகள்" என்று, பிணைக்கப்பட்டிருந்தவன் கூறினான்.

அவர் புன்னகையுடன் சொன்னார், "இப்போதுதான் என் நம்பிக்கை அதிகமாகிறது. பன்னெடுங் காலத்துக்கு முன்பு பூட்டப்பட்டவைகள் இந்தத் தளைகள் ! நீ தளைகளின் பெருமை இது என்கிறாய். பைத்தியக்காரா ! சரியாக யோசித்துப் பார். இது பெருமைக்குரியதல்ல ! தளைகள் மிக மிகப் பழையன— எனவே வலிவற்றன ! பன்னெடுங்காலமாக உள்ளவை, எனவே காலத்தின் தாக்குதலால், கொஞ்சம் கொஞ்சமாக வலிவை இழந்துள்ளன. எனவே இவை, அறுபட முடியாதன.