உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

இலட்சிய வரலாறு


லறிவாளர் பேசும் பேச்சிலே, இந்தக் கருத்து வெளிவருகிறது. புதிய கவிதைகள், புதிய நாடகங்கள், புதிய சினிமாக்கள், எதிலும் இந்த மூலக் கருத்து தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. எனவே, இந்தக் கருத்தைக் குலைத்துவிட முடியும் என்று கனவு காணும் நிலையை விட்டு விட்டு, காலத்தின் தாக்குதல் பலமாக விழா முன்பே, கருத்திலே தெளிவைக்கொண்டு நீதியை நிலைநாட்ட முற்பட வேண்டுகிறோம். கரங்களிலேயும் கருத்திலேயும் இரும்புச் சங்கிலி போட்டு விட்டிருக்கிறோமே எங்ஙனம் அந்த அடிமை விடுபட முடியும் என்று எண்ணியவர்கள் கண்முன்பு, இன்று, அறுபட்ட தளைகளைக் கழற்றி வீசிடாமலும்கூட, திராவிடன் ஏறு நடை நடந்து வந்து, எதிரே நின்று,


இது என் நாடு ! —இயற்கை, இதைப் பொன்னாடு ஆக்கும்—
         இங்கு ஜாதி கூடாது !— மதத்தின் கொடுமை கூடாது
         பொருளாதார பேதம் கூடாது !—வடநாட்டுச் சுரண்டல் கூடாது !
         உரிமை வேண்டும் புது வாழ்வுவேண்டும் !
என்று கூறுகிறான்.

காற்றையும், கடலலையையும் கேட்டுக் கலங்கிய திராவிடனின் செவியிலே, ஒரு இலட்சம் மக்களின் உணர்ச்சியும், சூளுரையும் விழுந்தது ! அவன் வெற்றிப் பாதையில் நடக்கிறான்— அந்தப் பயணத்தைத் தடுக்க முடியாது—வெற்றியைக் கெடுக்க இயலாது— அவன் விழிப்புற்றான், எழுச்சியுற்றான், கூட்டினை விட்டுக் கிளம்பிய சிங்கமெனக் காணப்படுகிறான். முப்புரியினருக்கு 'ஞானக்கண்' உண்டென்று வீம்பு பேசுபவர், அந்த ஞானக்கண் கொண்டுகூட அல்ல, சாதாரண ஊனக்கண்ணும், சராசரி மூளை பலமும் கொண்டு கண்டாலே போதும்; மறைக்க முடியாத உண்மையைக் காணலாம் !