மரண சாசனம்
திராவிடர் கழகத்திலுள்ள தோழர்கள் ஒவ்வொருவரும், தயாரித்துக்கொள்ள வேண்டிய மரண சாசனம் இது. வீழ்ச்சியுற்ற இனத்தை எழுச்சி பெறச் செய்துவிட்டோம்; எந்த விலை கொடுத்தேனும், விடுதலையைப் பெற்றுத் தீரவேண்டிய கட்டத்தில் வந்துவிட்டோம்.
வெட்டும் குத்தும், இனி நம்மை விரைந்து தேடி வரும்; வாழ்வுக்கும், சாவுக்கும், இடையே அமைந்துள்ள ஊஞ்சலிலேயே நாம் உலாவ வேண்டியவர்களாக இருப்போம். வைகைக் கரையிலே சென்ற கிழமை நடந்த அமளி, நமக்கு அறிவுறுத்தும் பாடம் அதுதான்; நாம் இருக்குமட்டும் நமது ஆதிக்கத்துக்கு ஆபத்துத்தான் என்பதை ஐயந்திரிபற அறிந்துகொண்ட வர்ணாஸ்ரமம், நாம் செத்தால் மட்டுமே, தான் இன்னும் கொஞ்ச காலத்துக்கேனும் ஜீவித்திருக்க முடியும் என்று நன்கு தெரிந்து கொண்டு, நம்மைக் கொல்லக் கோர நாட்டியம் செய்தது. நமது இரத்தத்தையும் கொஞ்சம் குடித்து ருசி பார்த்தது. நமது வளர்ச்சியின் அறிகுறி நமக்குமட்டுமல்ல, பிராமண சேவா சங்கத்தாருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்களின் மகஜர், நமது வளர்ச்சிக்கு ஆரியம் தரும் நற்சாட்சிப் பத்திரம்.
எல்லாம் சரி, ஆனால், இத்தகைய அறப்போரில் சேதம் நேரிடுகிறதே. இரத்தம் வீணாக்கப்படுகிறதே என்று எண்ணுகிறார்கள் சிலர். அவர்களுக்கு ஒரு வார்த்தை ! நாம் எடுத்துக்கொண்டுள்ள மகத்தான காரியத்தின் தன்மையை ஒரு கணம் சிந்திக்கவேண்டும்.
யுகயுகமாக இருந்துவருவதாகக் கூறப்படும் ஏற்பாடுகளை நாம், திருத்தி அமைக்க விரும்புகிறோம். மமதை மலைக்கு வேட்டு வைக்கிறோம். நம்மீது சிறுசிறு துண்டுகள் சிதறி விழுந்து, மண்டையைப் பிளக்கின்றன என்றால், நாம் வைத்த வேட்டு ம்வையைப் பிளந்து வருகிறது என்று பொருள்