பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 139


மணிமேகலை, மாந்தோப்பின் முனைக்கு வந்தாள். அவர் எப்படி இருக்காரோ? கஷ்டப்பட மாட்டார். வசந்திதான் இருக்காளே. இப்போ எந்த சட்டையை அவர் போட வேண்டும் என்று அவருக்கு ஆணையிடும் அளவுக்கு முன்னேறியிருப்பாள். கெட்டிக்காரி. சீச்சி! நான் ஒரு பெண்ணா? என் புத்தி ஏன் இப்படிக் கெட்டுப் போகணும்? அத்தை மகனிடம் மாமா மகள், தங்கை மாதிரி பழகக்கூடாதா?

மாந்தோப்பில் குருவிகள் ஒலமிட்டன. ஒரு கரிச்சான் குஞ்சு காகத்தை துரத்திக்கொண்டு வந்தது. ஊரெல்லாம் குஷ்டம் குஷ்டமுன்னு ஒரே பேச்சாப் போச்சு. ராம பத்திரன் புண்ணியவான்.... போகட்டும்.... என் வாயால அவரை சபிக்க வேண்டாம்.

கடந்த பதினைந்து நாட்களாக மருந்து சாப்பிடாமல் விட்டது அவளுக்கு நினைவுக்கு வந்தது. மாத்திரைகள் தீர்ந்து போய்விட்டன. மறுபடி வாங்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஞாபகம் இல்லை. ஞாபகப் படுத்தவும் ஆட்கள் இல்லை. ஊர் ஜனங்கள் எல்லாம் அவளை அன்போடுதான் பார்க்கிறார்கள். அவர்களுக்கு மாத்திரை விவரம் தெரியாது. விவரம் தெரிந்த சகோதரர்களோ, அதைப் பற்றி விசாரிக்கவில்லை. எப்படியோ போகட்டும். உடம்பு எக்கேடும் கெடட்டும் உடம்பு சுகமாயிட்டுன்னு தெரிந்த பிறகும் நம்பாதவன் போல் நடக்கும் கணவனுக்காக இருந்த இந்த உடம்பு இனிமேல் எப்படியோ போகட்டும். சீக்கிரமா போகட்டும்.

எவையெவை எல்லாமோ நெஞ்சில் புரள, அவள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தபோது, 'கூத்து' கோவிந்தன் அங்கே வந்தான். அடிக்கடி வந்து பார்க்கிறவன். அவளின் மனக் குமைச்சல் தெரியாமல்