பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 ★ இல்லம்தோறும் இதயங்கள்


நீட்டினான். அவன் கைகள் ஆடிக்கொண்டே கொடுத்தன. அவள் கரங்களும் அதை ஆடிக்கொண்டே வாங்கிக் கொண்டன. மணிமேகலை அழைப்பிதழைப் பிரித்துப் படித்தாள். ஆயாசப்பட்டவள்போல், சுவரில் தலையைச் சாய்த்துக்கொண்டாள். அவளுக்கு இருந்த நோயையும் இருக்கின்ற பிரச்னைகளையும் ஒரளவு அறிந்து வைத்திருந்த வெங்கடேசன் அவளைக் கல்லூரிக் காலத்தில் பஸ் நிலையத்தில் எப்படிப் பார்ப்பானோ அப்படிப் பார்த்தான். ஆசை பொங்கப் பார்த்தான். பிறகு அழுகை பொங்கக் கேட்டான்.

"ஏம்மா, பேசமாட்டக்கே? ஒரு வார்த்தையாவது பேசும்மா !”

மணிமேகலை தன்னை அடக்கிக்கொண்டு தலையை சுவரில் இருந்து எடுக்க முடியாமல் "என்னத்த பேச? நான் எஞ்ஜின் இல்லாத ரயிலாய் போயிட்டேன்" என்றாள். சொல்ல வேண்டியதை அவள் சொல்லிவிட்டாள். அவளையே மெய்துடிக்க, மெய் மறக்கப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேசன் வெளியேறினான்.

அந்த 'எஞ்ஜின்' ரயில்பெட்டியை விட்டுவிட்டு தனியாக ஓடியது.

'புதியோன் பின்னே போனது என் நெஞ்சே' என்று அந்த மணிமேகலையே புலம்பினாள் என்றால், இந்த மணிமேகலையோ “பழையோன் முன்னே நெஞ்சம் பட்டுப் போனது" போல் விக்கித்து நின்றாள். அந்த மணிமேகலையின் எண்ணச் சேர்க்கையால் புன்னை மரத்திற்குக் கீழே காதலனுடன் பேச நாணிய சங்ககாலப் பெண்-காதலன் காரணம் கேட்டபோது "என் அன்னை எனக்கு முன்னால் நட்ட புன்னை மரம். இது என் தமக்கை. நாணம் வராதா?’ என்று சொன்னதாக புலவர் பாடிய