பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


“நானும் ஒனக்கு அண்ணன்தாம்மா. என் பின்னாலயே வா. முருங்கை மரம் தேக்காகாது. ஊர்க்குருவி பருந் தாகாது. கூடப் பிறந்ததுனாலயே ஒருவன் சகோதரனாயிட மாட்டான். உடன்பிறந்தே கொல்லும் நோயின்னு ஒரு பாட்டு இல்லியா? நீ வாம்மா. எவனையும் பார்க்காம இந்த அண்ணன் பின்னால வா!”

சந்திரன் குழம்பினான். ஊர் ஜனங்கள் ஒட்டு மொத்தமாக அவனைப் பார்த்தார்கள். அவன் தன் சகோதர பாசத்தை நிரூபித்தாக வேண்டும்.

“நானும் ஸ்டேஷனுக்கு வாரேன். ” மணிமேகலை தம்பியைப் பார்த்தான். “தம்பியுள்ளான் படைக்கு அஞ்சான்” என்ற கம்பனை நினைத்தாள். ‘உள்ளான்’ என்றுதானே சொன்னான். ‘உள்ளாள்’ என்று சொல்லவில்லையே. இப்பகூட என்னக்கா நடந்தது? அந்த வீட்ல எனக்கும் உரிமை உண்டு. வாக்கா வீட்டுக்கு என்று சொல்ல மனசு வரலியே! ஸ்டேஷனுக்கு வருவானாம். அக்காவை வழியனுப்பி வைப்பதில் அவ்வளவு அவசரம்!

சந்திரன் தயங்கி மயங்கியபோது, மணிமேகலை மயக்கம் தீர்ந்தவள்போல் கம்பீரமாகப் பதிலளித்தாள்.

“நீ வீட்டுக்குப் போப்பா, ஸ்டேஷனுக்கு வந்தால், ஒனக்கு ரெண்டு கண்ணும் போன ஞாபகம் வந்துடும். ஒன்னால தாங்க முடியாது. அப்பா இறந்ததும், அவருக்கு ‘கொள்ளியாவது’ வை. போப்பா போ. நான் இப்போ என் அண்ணனோடதான் போய்க்கிட்டிருக்கேன். ” சந்திரனும், ரத்தினத்துடன் மணிமேகலையும் எதிர் எதிர் திசைகளில் போய்க் கொண்டிருந்தார்கள்.

‘டவுன்’ கட்டபொம்மனில் ஏறி ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். அங்கே ‘கூத்து’ கோவிந்தன் நின்றான்.