பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


பேட்டைக்கருகே வந்துகொண்டிருந்தாள். எதிரே ‘கிராமத்து ஹறிப்பிபோல’ ஒரு உருவம் வந்தது. சந்தனப் பொட்டு நெற்றி, துளசி மாலைக் கழுத்து. சந்தேகமில்லை. ‘கூத்து’ கோவிந்தன்தான்.

மணிமேகலை அப்படியே நின்றாள். பின்னால் வந்த சைக்கிள்காரன் ‘மணி அடிக்கேனே காதில் விழலியா’ என்று கேட்கும்படி நின்றாள். பாதாதி கேசம் வரை பரவச மானாள். சற்றுநேரம் வரை நொந்த நெஞ்சம், இப்போது வட்டியும் முதலுமாக ஆனந்தத்தை அனுபவித்தது.

எதிரில் வருவோரை முட்டாக் குறையாக மோதிக் கொண்டே, பவளக்கொடியின் அரண்மனையில் அர்ச்சுனன் நடந்ததுபோல், கோவிந்தன் நடந்து, அவளைப் பாராமலே கடந்தபோது அவள் ‘அண்ணே’ என்றாள். அவன் இப்போது அப்படியே நின்றான்.

“நீங்க எப்பண்னே வந்திங்க?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னால.”

“ரயில் இன்னும் வந்திருக்காதே.”

“லாரி வந்துடும்.”

“அப்பா எப்படி இருக்கார்?”

“அப்படியே படுத்துக் கிடக்காராம்.”

இருவரும் குடிசை மாற்று வாரிய வீட்டடுக்கு வரை நடந்து போனார்கள். மணிமேகலை தான் பட்ட நிலையையும், ஏற்படவிருந்த விபத்தையும் எடுத்துக் கூறக் கூற எத்தனையோ சந்திரமதிகளாய், திரெளபதிகளாய், கண்ணகிகளாய் நடித்த அந்த நடிகன் இப்போது தன் இயல்பான உணர்வுகளை அவற்றின் போக்கிலேயே விட்டவன்போல் கண்களைத் துடைத்துக் கொண்டான். பிறகு அவனும் அவள் வந்தபிறகு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, ஒரு கூத்து போலவே விளக்கினான்.