பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                              சு. சமுத்திரம்  +  25

தோப்புக்கருகே மொய்த்திருந்த கரும்புத் தோட்டத்தில் கரும்பை ஒடித்து சந்திரன் கொடுக்கும் நேர்த்தியும், அவளுக்கு அவனிடம் பிடி கொடுக்க வேண்டும் என்கிற அளவுக்குப் பிடித்துவிட்டது. ஊர் விவரங்களோடு, உலக விவரங்களையும் தெரிந்துவைத்திருந்த அவனும், அவள் உணர்ச்சிகளைப் போற்றுபவன் போல் நடந்து கொண்டான்.

    அரக்கோணத்திலேயே பிறந்து வளர்ந்து, அங்கே வீசும் தொழிற்சாலையின் கரித்தூள்களை சுமந்து வரும் காற்றாலும், சென்னைக் கல்லூரி விடுதியில், உஷ்ணத்தை உக்கிரப்படுத்தும் காற்றில் வெந்தும் நொந்தும் போயிருந்த பாமா, அந்தக் கிராமத்துக் காற்றில், தங்கு தடையில்லாமல் குமண வள்ளலைப்போல் வீசிய காற்றில் குளிப்பவள்போல், தன்னை மறந்து தலைமுடியை விரித்து அப்படியே மெய்மறந்து நின்றிருக்கிறாள். ஒரு வாரப் பொழுதும் அவளுக்கு ஒரு நாளாகப் பறந்தது.
    ஆகையால் அன்றும், பொழுது சாய்கிற சமயத்தில், 'மாட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்த இடத்திலிருந்தே கைவிரித்த மணிமேகலையின் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, அவளையும் வலுக்கட்டாயமாக தென்னந்தோப்பை நோக்கி நடக்க வைத்துவிட்டாள்.
    இருவரும் ஏரிக்கரை மீது நடந்துகொண்டிருந்தார்கள். மணிமேகலை 'ஒருமாதிரி' இருந்தாள். பாமா கேட்பதற்கு மட்டுந்தான் பதில் சொன்னாளே தவிர அவளாகப் பேசவில்லை.
    "ஏன் அண்ணி ஒரு மாதிரி இருக்கிங்க?"
    "நான் எங்கே இருக்கேன்? நடக்கல்லா செய்யுறேன்..." 
   "சும்மா சிரிச்சி மழுப்பாண்டாம். நீங்க செயற்கையாச் சிரிக்கதுக்கும் இயற்கையா சிரிக்கதுக்கும் முகத்துல வித்தியாசம் தெரியும்."