பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 39


துர்ப்பாக்கிய நிலையில் இருக்கும் அவர், பாமாவை சந்திரனுக்குக் கட்டிவிட்டால், அரக்கோணத்தாருடன் உறவு பலப்படும் என்றும், அந்த பலத்தில் மகள் அடிக்கடி வரலாம் அல்லது குறைந்த பட்சம் அவளைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வரும் என்று நினைத்தார். அதோடு பாமா நல்ல பொண்ணு; அதோடு இந்த கனகத்தோட தங்கச்சியும் இவள் மாதிரிதான் இருப்பாள். இவள் சூர்ப்பனகை... அவள் தாடகைப் பிராட்டியாம். ஒரு தடவை குட்டுப்பட்டது போதும்!

எல்லோரும் அந்தக் கிழவரைப் பார்த்தார்கள். அவர் நிதானமாக எழுந்து செருப்பைப் போட்டுக்கொண்டே “எம்மா, ஆயிரம் பேரு ஆயிரம் சொன்னாலும், பாமாதான் இந்த வீட்டுக்கு மருமகள். அடுத்த மாசம் ஆவணில வச்சிடலாம். மாப்பிள்ளையோட கலந்து பேசி தேதிய எழுது...” என்று சொல்லிவிட்டு மருமகளை ஜாடையாகப் பார்த்துக்கொண்டே வெளியேறிவிட்டார்.

கனகத்தால் தாங்க முடியவில்லை. கைகளை நெறித்தாள். மணிமேகலைக்கே அவள்மீது அனுதாபம் ஏற்பட்டது.

“என்னை மன்னிச்சிடுங்க அண்ணி. போன தடவ வந்திருக்கும்போது என்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்தால், நான் இந்தப் பேச்சையே எடுத்திருக்க மாட்டேன். எந்த விஷயத்தையும் மூடிமூடி வச்சால் நிலைமை இப்படித்தான் முடியும்.”

“இப்பகூட நீ நினைச்சால் எதாவது பண்ணலாம்.”

“நிலைமை என்னையும் மீறிட்டு அண்ணி! பாமாவும் சந்திரனும் ஒருவர ஒருவர் மனசார விரும்புறாங்க. இப்போ நம்ம விருப்பத்த அவங்க விருப்பம் விழுங்கிட்டு. கவலப்படாதிங்க, ஒங்க தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறது என்னோட பொறுப்பு.”