பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 ★ இல்லம்தோறும் இதயங்கள்


கொண்டே, உறவினர் வீடுகளில் படியேறிக் கொண்டிருந்தாள். இறுதியாக தூரத்து உறவினரான குமரேசமாமா வீட்டுக்கு வந்தாள்.

குமரேச மாமாவைக் காணவில்லை. அவர் மகன் வெங்கடேசன், புதிதாக வாங்கியிருப்பதுபோல் தோன்றிய ஒரு பின்னல் நாற்காலியில் உட்கார்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தான். இருபத்தொன்பது வயதாகியும் இன்னும் கல்யாணமாகாமல், குறுந்தாடி மீசையுடன், ஒரு ஞானிக்குரிய தோரணை இல்லாமலும், அதேசமயம் அபிலாஷைகளைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவன் போலவும் தோன்றிய அவனைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. பிறகு தன்னைப் பார்க்கவும் அந்தகணத்தில் அவளுக்குப் பாவமாக இருந்தது. அவனை ஊருக்கு வந்தபிறகு, பலதடவை பார்த்திருக்கிறாள். ஆனால் அவன் வீட்டுக்குள் நுழையும்போது-மருமகளாக நுழையப்போகும் வீடு என்று அவளே கற்பனை செய்திருந்த அந்த வீட்டின் படிவாசலில் கால் வைத்த போது, நினைவுகள் பின்னால் போயின!

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தூத்துக்குடி கல்லூரி ஒன்றில், அவள் பி.யூ.ஸி. படித்துக்கொண்டிருந்தாள். அங்கே இன்னொரு கல்லூரியில் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த வெங்கடேசன், பஸ் நிலையத்தில் அவளிடம் சகஜமாகப் பேசுவான். திடீரென்று ஆங்கில போதனா மொழிக்குள் அகப்பட்டு திக்குத் தெரியாமல் அவள் தவித்தபோது, அவன் திசை காட்டினான். தூரத்து உறவுப் பலத்தில், அவள் வீட்டிற்கு வந்து சகஜமாகப் பேசுவான். அவளும் வில்லங்கம் இல்லாமலே பழகினாள். ஆனால் ஊர் விடவில்லை.

ஊர்க்காரர்கள் இருவரையும் இணைத்துப் பேசப்பார்த்தார்கள். கிழவர்கள் ராம-லட்சுமி என்றார்கள்.